sa1
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அனைவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து “வழக்கு விசாரணை நடைபெற்ற மாநிலம்’ என்ற அடிப்படையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில், திமுக பொதுச் செயலர் க.அன்பழகனையும் மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரராகச் சேர்ந்து கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், கர்நாடக அரசுத் தரப்பு, ஜெயலலிதா தரப்பு வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, சசிகலா தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே முன்வைத்தார்.
“ஜெயலலிதாவுடன் வசித்த காரணத்துக்காக, சொத்துகள் சேர்த்ததாக சசிகலா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க முடியாது. தனது சொந்தத் தொழில் மூலம் வந்த லாபத்தைக் கொண்டே சசிகலா சொத்து சேர்த்தார். அதற்கான வரியை உரிய முறையில் செலுத்தி உள்ளார். இதுகுறித்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் ஆராயாமல் அளித்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது’ என்று சேகர் நாப்தே வாதிட்டார். இதையடுத்து, அவரது வாதத்தை வரும் வியாழக்கிழமையும் (ஏப்ரல் 21) தொடர நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.