வரலாறு முக்கியம் அமைச்சரே..
1989ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதி, வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, ஜி.கே. மூப்பனார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை, இதற்கு முந்தைய “வ.மு.அ.” பகுதியில் பார்த்தோம். அந்த காலகட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி, தராசு வார இதழுக்கு அளித்த பேட்டி, இன்று.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வாழப்பாடி கூத்தப்ப கவுண்டர் இராமமூர்த்தியை, காங்கிர்ஸ் புகழ் ஸ்வாகத் ஓட்டல், பழைய பிளாக்கிலுள்ள குளுகுளு ஊட்டப்படாத 407ம் எண் அறையில்14 ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு சந்தித்தோம்.
தங்கபாலு எம்.பி, ரங்கராஜன் குமாரமங்கலம் எம்.பி., நவநீதன் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அந்தச் சின்ன அறையை முற்றுகையிட்டு இருந்தனர். தங்கபாலுவும் – ரங்கராஜனும் கூ.ரா. வுடன் தனியே ரகசியம் பேசிவிட்டுப் பயணமாயினர்.
நாம் உள்ளே சென்றதும், “வாஙிக.. வணக்கம். உங்க பத்திரிக்கையில் மட்டும்தான் எனது அப்பாய்ண்ட்மெண்ட் பற்றி சரியாக அசஸ் பண்ணி ரெண்டு மாசத்துக்கு முன்னேயே வெளியிட்டு இருந்திங்க” என்றார் ராமமூர்த்தி.
நீங்கள் பதவி ஏற்பதற்கு முன்பகவே மூப்பனார் அதரவாளர்கள் தீக்குளிப்பு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று எதிர்க்கத் துவங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏ க்கள் கூட்டாக உங்களை மாற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது தற்செயலானதா?
18 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து எனக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டால் எப்படி தற்செயலானதாக இருக்கும்?
அப்படியானால் இதற்கொரு பின்னணியும் திட்டமும் இருக்க வேண்டுமல்லவா?
புதிய தலைவர் நியமனமாகும் போது சிலருக்கு ஆரம்பகாலத்தில் கோபம் இருக்கலாம். அது இப்படி வெளிப்படலாம். பிறகு தணியலாம். தணியும்… தணியவேண்டும். அதற்காக முயற்சிப்பேன்..என்னை எதிர்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு பின்னனி இருக்கத்தான் செய்கிறது அது கட்சிக்கு எதிரானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.
நீங்கள் அவுட் கோயிங் பிரசிடெண்ட் முப்பனாரைச் சந்தித்துப் பேசினீர்களா?
பிரதமர் என்னைத் தலைவராக நியமனம் செய்த ஏப்ரல் 10-ம் தேதியே அவரை சந்தித்துப் பேசினேன். வாழ்த்து கூறினார். இன்று தலைவர் பொறுப்பை காமராஜ் மாளிகையில் ஏற்றதும் முதல் பணியாகத் தலைவர் மூப்பனாரை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினேன். முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகத் தெரிவித்தார்! அவர் முழுமனதுடன் ஒத்துழைப்பார் என்றே கருதுகிறேன்.
பிரதமர் ராஜீவ்காந்தி சில முக்கிய வேலைத் திட்டங்களை வகுத்துத் தந்திருப்பதாக விமான நிலைய வவேற்பின் போது குறிப்பிட்டீர்களே அந்தத் திட்டங்கள் என்னென்ன?
முக்கியமான திட்டம் என்பது கட்சியை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை முற்றாகச் சீரமைப்பது! எதிர்க்கட்சிப் பாத்திரத்தைக் கட்சி வகிக்கிறபடி சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு ஏனைய எதிர்கட்சிகளுடன் ஒத்துழைப்பது. மூன்றாவது பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கட்சியின் கிளைகளை அமைப்பது. கட்சிகிளைகள் இல்லாத கிரமமே இல்லை என்கிறபடி அமைப்பு உருவாகத் தீவிரமாகப் பாடுபடுவது. இப்போது பல இடங்களில் கிளைகள் இல்லை. எனவே இதில் கவனம் செலுத்திச் செயல்படுவேன்.
சிவாஜி எம்.பி.எஸ். போன்றவர்களைக் காங்கிரசுக்குத் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளீர்களே!
கோபதாபம் காரணமாக காங்கிரசிலிருந்து வெளியேறிய எல்லோருமே திரும்பக் காங்கிரசுக்கு வரவேண்டும் என்று என்னைத் தலைவராக பிரதமர் ராஜீவ் அறிவித்த அன்றே திறந்த மனதுடன் அழைப்பு விடுத்திருந்தேன். இந்த அழைப்பு நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தலைவர்களுக்குமே பொருந்தும்! அவர்கள் விரும்பினால் வரலாம்! எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது காங்கிரசிலிருந்து வெளியேறிய எல்லோரையுமே நேரில் சந்திப்பேன்.
உங்களைச் சந்திப்பதற்காக திரிசூலம் விமான நிலையத்தில் சிவாஜி கணேசன் காத்திருந்தாரே! சந்தித்தாரா?
அவர் ஒரு வாயிலில் காத்திருந்தார் .நான் வேறொரு வாயில் வழியாக வந்துவிட்டேன். அவர் எனக்கு வாழ்த்து சொல்லக் காத்திருந்தார் என்பது நான் வெளியேறிய பிறகே எனகுத் தெரிந்தது.
டி.ராஜேந்தர் கூட அப்போது உங்களைச் சந்தித்துள்ளாரே!அதில் ஏதேனும் விஷேசம் உண்டா?
அவரும் அவரது துணைவியாரும் எனக்கு மரியாதை நிமித்தம் மாலையணிவித்து வாழ்த்துக் கூறினார்கள்.வேறு விஷேசமில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஏனைய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தார்களா?
சுவாமிநாதன் சந்தித்தார். அபுல்ஹாசன் நாளை வந்து சந்திப்பதாகக் கூறினார். எஸ்.கே.டி ராமச்சந்திரன் ஊரில் இல்லை.விரவில் சந்திக்க வருவார் என்றே நம்புகிறேன்.
ஏனைய மாநில நிர்வாகிகளை எப்போது அறிவிப்பீர்கள்?
இம்மாத இறுதிக்குள் மாநில நிர்வாகிகள் அனைவரும் அறிவிக்கப்பட்டு விடுவார்கள்.
மாவட்டத் தலைவர்கள் நியமனம் எப்போது?
அனைத்து மாவட்டங்களுக்கும் பாரவையாளர்களை அனுப்பி கட்சியினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
நீங்கள் அமைக்கப்போகும் கமிட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு இருக்குமா- இல்லை பழையபடியேதானா?
அனேகமாக நான் அமைக்கப் போகும் கமிட்டியில் ஆவ்ரேஜாக 50 வயதும் அதற்கு கீழானவர்களே இடம் பெறுவார்கள். இளமைத் துடிப்போடு செயல்பட்டு இளைஞர்களை ஈர்க்கவே திட்டங்களை வகுத்திருக்கிறேன்.
புதியதாகக் கமிட்டி அமைப்பதில் மத்திய காங்கிரஸ் தலைமை உங்களிடம் தாரளமாக நாடந்து கொள்ளும் என்று நம்புகிறீகளா? இல்லை கோஷ்டி வாரியாகப் பிரித்து பழையபடி ’கோட்டா சிஸ்டத்தில் பதவிப் பங்கீடு நடைபெறுமா?
பழையமுறை என்பது வேறு. ஆனால் இப்போது, எல்லாத் தர்ப்பினரையும் [குழு] திருப்திப்படுத்தச் சிலரை நிர்வாகிகளாகப் போட்டாலும், தொடந்து கட்சியை நடத்திச் செல்வதற்காக என்க்கென்று சில சுதந்திரமான உரிமைகளைப் பிரதமர் ராஜிவ்காந்தி கொடுத்திருக்கிறார். உதாரணமாக10 பேர் கொண்ட கமிட்டி அமைப்பதாக வைத்துக் கொண்டால் இதில் பெரும்பான்மையானவர்களை என் உசிதம்போல என்னோடு ஒத்துப் போகிறவர்களை நியமனம் செய்து கொள்ளலாம். இந்த விசேட உரிமையை தலைவர் ராஜீவ் எனக்கு அளித்திருக்கிறார்.
1969,70 களில் பிறந்தவர்கள் 80 லட்சம் பேர். அவர்கள் வருகிற தேர்தலைச் சந்திக்க வரும் இளம் வாக்காளர்கள். அந்த 80 லட்சம் வாக்காளர்களைக் கவர ஏதாவது திட்டம் கைவசம் உண்டா?
ஓ..உண்டே. இந்த 80 லட்சம் இளைஞர்களில் 15 லட்சம் பேரையாவது கவர்வது, அவர்களது இயக்கமாகக் காங்கிரசை மாற்றுவதும்தான் எனது திட்டமே! கிராம கமிட்டிகளையும் நகரக் கமிட்டிகளையும் இளைஞர்கள் கையில் ஒப்படைக்க இருக்கிறேன் . இளைஞர்களால் இயக்கப்படும் அமைப்பைத்தான் இளைஞர்கள் விரும்பி ஏற்பார்கள். எனவே கேந்திரமான அடிப்படைக் கிளை அமைப்புகளை இளைஞர்களிடமே தரப்போகிறேன். ஜவஹர் வேலைத் திட்டத்தைச் சொல்லி, இளைஞர்களை பங்கேற்க வைத்து அவர்களின் பார்வை காங்கிரசை நோக்கித் திரும்புகிறபடி செய்வேன் . இது ஒரு கூட்டு முயற்சி. எனது தோழர்கள் ஒத்துழைப்பார்கள் என்றே நம்புகிறேன்.
காமராஜர், தொண்டர்களையும் மக்களையும் கவர்ந்திழுத்ததைப் போலச் செயல்பட முனைவீர்களா?
பெரியவர் காமராஜ் சென்னையில் உள்ள நாட்களில் எல்லாம் கட்சி அலுவலகத்திற்கு மாலை ஐந்து மணிக்கே வந்து கட்சித் தொண்டர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இடைமறிப்புகள் இல்லாமல் பெரியவரை எவரும் தாரளமாகச் சந்தித்து எந்தக் கருத்தையும் கூறலாம். அதுமாதிரிச் சந்தர்ப்பம் அவருக்குப் பின்னால் வந்த தலைவர்களால் உருவாக்கித் தரப்படவில்லை. நான் பெரியவர் பாணியில், அதைத் தொடரப் போகிறேன். இதனால் எனக்கும் கட்சித் தொழர்களுக்கும் இடையில் சுவரெழும் நிலை தவிர்க்கப்படுவதோடு பிரச்சனைகளை நான் புரிந்துக் கொண்டு செயல்பட உதவியாக இருக்கும்.தோழர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் அதைச் செய்வேன்.
தமிழக அரசியலில் உங்களின் நண்பர்கள் யார்?பகைவர்கள் யார்?
எனக்கென்று தனிப்பட்ட முறையில் இனி நண்பர்கள் பகைவர்கள் இருக்க வாய்ப்பில்லை. காங்கிரசுக்கும் தலைவர் ராஜீவ்காந்திக்கும் யார் நண்பர்களோ அவர்கள் எனது நண்பர்கள் தோழர்கள்! எவர் பகைவர்களொ அவர்களெல்லாம் எனது பகைவர்கள்.
(நன்றி: தராசு வார இதழ்)