என். சொக்கன்:
1
சிவபெருமானைப் பக்தர்கள் ‘கண்ணுதல்’ என்பார்கள்.
‘நுதல்’ என்றால் நெற்றி, கண்+நுதல், அதாவது, நெற்றியிலே கண் கொண்டவன் சிவபெருமான்.
இந்தக் கண்ணுதலுக்கு இன்னொரு பொருளும் உண்டு, அகக்கண்ணால் பார்த்தல்.
அதென்ன அகக்கண்?
புறக்கண்கள் என்பவை நம் முகத்தில் உள்ளவை. வெளிச்சம் இருந்தால், அவற்றைக்கொண்டு பொருள்களைப் பார்க்கலாம்.
அகக்கண் என்பது, நமக்குள் பார்க்க உதவுவது. ஆன்மா, ஞானம் என்றெல்லாம் சொல்வார்கள்.
அந்த அகக்கண்ணைக்கொண்டு ஒரு விஷயத்தைப் பார்ப்பதுதான் கண்ணுதல், அதாவது, ஒன்றின் உட்பொருளை உணர்தல், சிந்தித்தல், மதித்தல்.
கண்ணுதல் என்ற சொல்லை இறந்தகாலத்தில் எழுதும்போது ‘கண்ணிய’ என்று வரும். ‘கிள்ளுதல்’ என்பது ‘கிள்ளிய’ என்று வருவதைப்போல.
இந்தச் சொல்லைப் பல இலக்கியங்களில் பார்க்கலாம். கம்ப ராமாயணத்தில் ‘வேதம் கண்ணிய பொருள்’ என்று ஒரு பதம் வரும். அதாவது, வேதத்தின் உட்பொருள்.
‘கண்ணிய’ என்றவுடன் ஓர் அரசியல் சொல் நினைவுக்கு வரவேண்டுமே: ‘கண்ணியம்’!
இதன் பொருள், சிறப்பாகக் கருதுதல், மதித்தல், மதிப்பு என்று பட்டியலிடுகிறார் தேவநேயப் பாவாணர். Ganya என்ற வடமொழிச்சொல்லையும் அவரே குறிப்பிடுகிறார்.
ஒருவரைக் ‘கண்ணியவான்’ என்றால், அவர் சிறந்த, மதிப்பிற்குரிய சிந்தனைகளைக் கொண்டிருப்பவர், அகக்கண்ணால் நல்லதையே பார்ப்பவர் என்ற பொருள் கொள்ளலாம். அரசியலில் இருப்பவர்களுக்குத் தேவையான தகுதிதானே இது.
தன் மதிப்புக்குக் குறைவான ஒரு செயலை யாராவது செய்யத்துணிகிறார் என்றால், ‘அது கண்ணியக்குறைவு’ என்பார்கள். கண்ணியத்தோடு நடந்துகொள்கிறவர்களைக் ‘கண்ணியர்’ என்கிறார்கள்.
கன்னியரையும் கண்ணியர் எனலாம், மான் கண்ணியர், மீன் கண்ணியர், வேல் கண்ணியர்…
(தொடரும்)