7

சென்னை: 

.தி.மு.க., இரண்டு கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய  ஐந்து கட்சிகள் இணைந்து “மக்கள் நலனுக்கான கூட்டியக்கம்” என்ற பெயரில் மக்கள் பிரச்சினைக்காக போராடப்போவதாக அறிவித்தன. “இந்த கூட்டியக்கம், தேர்தல் கூட்டணியாகவும் அமையும்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

ஆனால், கூட்டியக்கத்தில்  உள்ள ம.ம.க.வின் தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, “இது மக்கள் போராட்டத்துக்கான கூட்டணிதான். தேர்தல் கூட்டணி குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடத்தி பிறகு அறிவிப்போம்” என்றார்.

அதன் பிறகு, வைகோ, “ஐந்து கட்சிகளும் மக்களுக்காக இணைந்து போராடுகிறோம். தேர்தல் கூட்டணியாகவும் இது அமையட்டும் என்றுதான் ஜவாஹிருல்லாவிடம் வேண்டுகோள் வைத்தேன். அவர்களது கட்சி இது குறித்து பரிசீலித்து நல்ல முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்த நிலையில் இன்று வெளியான “ஜனனம்” வார இதழுக்கு பேட்டி அளித்திருக்கும் ஜவாஹிருல்லா, “வைகோ கூறும்  தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை” என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். “தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இல்லாமல்  அமையும் மூன்றாவது, நான்காவது அணிகளால் எந்த ஒரு  தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” என்று ஆணித்தரமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அந்த பேட்டியில் ஒரு கேள்விக்கு ஜவாஹிருல்லா அளித்துள்ள பதில்:

“தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகள் இல்லாமல் ஒரு ஆட்சியை தமிழகத்தில் அமைக்க முடியாது. இந்த இருண்டு கட்சிகளைத் தவிர மூன்றாவது, நான்காவது அணி என்று ஏதேனும் உருவானால், அது தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனவே, சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவானால் அது அ.தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும்.”

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு தனி அணியாக போட்டியிட முடிவு செய்திருக்கும் வைகோவுக்கான பதிலாகவே இதை பார்க்க முடியும்.

மேலும், ஜவாஹிருல்லா தனது பேட்டியில்  “அ.தி.மு.க.வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்த நேரத்தில் தமிழகத்தில் ஒரு மந்த நிலை இருந்தது. தற்போது ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வரான பிறகு அந்த நில மாறத் துவங்கியுள்ளது. மக்கள் நலன், மாநில நலன் சார்ந்த விசயங்களில் முதலமைச்சர் முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வர அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் எனது தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்க்கட்சிகளுக்கு அன்த வாய்ப்பு கிடைத்ததா என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அந்த பேட்டியில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது, சர்வதேச முதலீடுகள் எந்த அளவுக்கு நிறைவேறும் என்ற சந்தேகம், சட்டமன்றத்தில் தொடர்ந்து 110ம் விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பில்லை என்ற குற்றச்சாட்டு போன்ற பல விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், ஜவாஹிருல்லாவின் இந்த பதில், அ.தி.மு.க. மீது இருந்தாலும், மிக அனுசரணையுடன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜவாஹிருல்லா.

ஆகவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடவே ம.ம.க. விரும்புகிறது என்பது புலனாகிறது.