என், சொக்கன்
இப்போதெல்லாம் யாராவது தேர்தல் கூட்டணி அமைத்தால், ‘இது கொள்கை அடிப்படையிலான கூட்டணியா, அல்லது, வெறும் தொகுதி உடன்பாடுதானா?’ என்று கேட்கிறார்கள்.
அதென்ன ‘கொள்கை’?
அரசியல்வட்டாரங்களில் இந்தச்சொல்லை நிறையவே கேட்கிறோம். சில தலைவர்களைக் ‘கொள்கைவீரர்’ என்கிறார்கள். ‘கொள்கைக்காக எதையும் தியாகம் செய்வார்’ என்கிறார்கள். எதிர்க்கட்சியினரைக் ‘கொள்கையில்லாதவர்கள்’ என்று சாடுகிறார்கள்.
அரசாங்கத்திலும் கொள்கைகள் உண்டு. (உதா: இறக்குமதிக்கொள்கை, வெளியுறவுக் கொள்கை) நிறுவனங்களிலும் கொள்கைகள் உண்டு. (உதா: ஆள்சேர்ப்புக் கொள்கை, பேறுகால விடுமுறைக் கொள்கை).
இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது, கொள்கை என்பது இலக்கல்ல, அதை நோக்கி வழிநடத்துகிற ஒன்று என்பது புரிகிறது. அதாவது, இதை இப்படிதான் செய்யவேண்டும் என்கிற உறுதி.
கொள்கை என்றால், அதை அடிக்கடி மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால் அது சந்தர்ப்பவாதமாகிவிடும்.
உதாரணமாக, காந்தி பின்பற்றியது அகிம்சைக்கொள்கை. அவர் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.
வன்முறை/அகிம்சை என்பதுபோன்ற விஷயங்களில் மாற்றத்துக்கான இடமே அதிகமில்லை. ஆனால், எல்லாக் கொள்கைகளும் இவ்வளவு கண்டிப்பாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில கொள்கைகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கலாம். வேறோர் உயர்ந்த கொள்கைக்காக, இந்தக் கொள்கையைத் தளர்த்தவேண்டியிருக்கலாம்.
உதாரணமாக, வேலைநிமித்தமாக மும்பை சென்றிருந்தபோது நான் கேள்விப்பட்ட விஷயம் இது: அங்கே ஒரு நிறுவனம், தன் ஊழியர்களுக்காக இலவச மருத்துவமனையொன்றை அமைத்தது. அதாவது, அங்கே சிகிச்சைக்குப் பணம் பெறுவதில்லை என்ற கொள்கையுடன் செயல்பட்டது.
ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் அந்த மருத்துவமனைக்கு வரவில்லை. காரணம், பணம் கொடுக்காமல் வைத்தியம் பெற்றால் தாங்கள் குணமாகமாட்டோம் என்று அவர்கள் நம்பினார்கள்.
இதைப் புரிந்துகொண்ட அந்நிறுவனம், ஒரு மிகச்சிறிய தொகையை மருத்துவக் கட்டணமாக விதித்தது. தொழிலாளர்கள் வரத்தொடங்கினார்கள்.
இங்கே சேவை என்கிற உயர்ந்த கொள்கையைக்கருதி, கட்டணம் பெறுவதில்லை என்ற கொள்கையைத் தளர்த்திக்கொள்ளவேண்டிய நிலைமை. இப்படி அவசியம் கருதிக் கொள்கைகளில் எப்போதாவது சமரசம் செய்யலாம், எப்போதும் செய்யலாகாது.
‘கொள்கை’ என்பது புதியவார்த்தைபோல் தோன்றினாலும், மிகப்பழைய பயன்பாடுதான். சிலப்பதிகாரத்திலேயே இருக்கிறது. எட்டிசாயலன் என்பவனுடைய வீட்டிற்கு வரும் ஒரு துறவியை ‘அதிராக்கொள்கை அறிவன்’ என்று அழைக்கிறார் இளங்கோவடிகள். அதாவது, கொள்கையில் நடுக்கமில்லாதவன்!
‘அதிராக்கொள்கை’: என்ன அழகான சொல்!
(தொடரும்)