
தஞ்சை குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி அருகே ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நடத்தும் தமிழரசி திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அருகே அரசுக்கு சொந்தமான ஒரு லட்சத்து இருபதாயிரம் ச.அடி இடம் இருக்கிறது.
கடந்த ஆண்டு துவக்கத்தில் தமிழரசி திருமண மண்டபத்தில் பொங்கல் விழா நடத்தினார் எம். நடராஜன். அப்போது விருந்தினர்களின் வாகனங்களை அந்த அரசு இடத்தில் நிறுத்திக்கொள்ள, அப்பகுதி மக்களிடம் அனுமதி கோரியிருக்கிறார்கள். மக்களும் தற்காலிகமாகத்தானே நிறுத்தப்போகிறார்கள் எனறு அனுமதி அளித்துள்ளார்கள்.
ஆனால் அந்த விழா முடிவுற்ற பின்னரும் , அங்கு வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி கவுன்சிலர் (அ.இ .அ.தி.மு.க) சண்முகப்பிரபு, அவ்விடத்தில் குடியிருந்த மக்களை மிரட்டி அவர்கள் வீடுகளை இடித்து காலி செய்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அதிமுக முக்கியப்புள்ளிகள் பின்னணியில் இருப்பதாக அப் பகுதி மககள் குற்றம் சாட்டினர்.
அதோடு, ம.நடராஜன் மற்றும் அமைச்சர் வைத்தியலிங்கத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தினர். இப் போராட்டத்தை தஞ்சை ஒன்றிய பாஜக தலைவர் சந்திரன் ஒருங்கிணைத்தார்.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, “அந்த இடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தோம். அப்படி முறையிட்ட ஏழு பேர்களுக்கு , இவ்விடத்தின் மீதான உரிமை செல்லும் என தீர்ப்பளிக்கப் பட்டது. அதையம் மீறி ஆளுங்கட்சியினர் மிரட்டி எங்களை வெளியேற்ற முயல்கிறார்கள். இந்த பிரச்சினைக்குக் காரணம் எம். நடராஜனும், அமைச்சர் வைத்தியலிங்கமும்தான்” என்று கூறினர்.
செய்தி, படம்: தஞ்சை. இரா. பெரியார்
Patrikai.com official YouTube Channel