மும்பை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு தண்ணீரை வீணடித்து இங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்த கூடாது என மராட்டிய மாநில பா.ஜ.க. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா மும்பையில் 8–ந்தேதி நடைபெறுகிறது. போட்டித் தொடர் வருகிற 9–ந் தேதி முதல் மே 29–ந் தேதி வரை நடக்கிறது. 9–ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தற்போதைய சாம்பியன் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் மும்பை, புனே, நாக்பூர் நகரில் மட்டும் 19 போட்டிகள் நடைபெறுகின்றன. .
மராட்டிய மாநிலம் கடந்த ஆண்டு சந்தித்த கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. தற்போதும் வறட்சி நீடிக்கிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மராட்டிய மாநிலத்தில் நடத்த கூடாது என அந்த மாநில பா.ஜ.க., போர்க்கொடி தூக்கி உள்ளது.
இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஷாங்க் மனோகருக்கு மராட்டிய மாநில பா.ஜ.க., தலைவர் விவேகானந்தா குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: –
மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடந்த இரண்டாண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 90 லட்சம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், த்தின் மும்பை, புனே, நாக்பூர் நகரங்களில் நடத்தப்படவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்காக ஒவ்வொரு முறை மைதானத்தை செப்பனிட்டு, செம்மைப்படுத்தவும் சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர்வரை தண்ணீர் தேவைப்படும். வாரத்தில் மூன்றுமுறை இதைப்போல் செம்மைப்படுத்த சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
இவ்வகையில், 19 போட்டிகளுக்காகவும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒட்டுமொத்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்து இங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது அறிவார்ந்த செயலாக அமையாது.
நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டிய இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டிகளை மராட்டிய மாநிலத்தில் நடத்தும் முடிவை கைவிட்டு, வேறொரு இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.