Mumbai-Love-failureTV-Actress-Suicide
மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா (வயது24). இவர் ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இந்தநிலையில், பிரதியுஷா நேற்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். இரவு 7 மணியளவில் திடீரென அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த காந்திவிலி போலீசார் மருத்துவமனைக்கு சென்று பிரதியுஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.