ஆசியாவிலேயே எழுத்தறிவில் முன்னணி வகிக்கும் இந்திய கிராமம்!
நம் இந்திய கிராமம் எப்படி இருக்கும் என எல்லோருக்கு தெரியும் . அப்படி இருந்து வரும் இந்திய வரைபடத்தில் இதுவரை கண்டிராத ஒரு கிராமம் இங்கே பார்வைக்கு வந்திருக்கிறது. அதுவும் கல்வி வெளிச்சம் பெற்ற அத்தனை வசதிகளும் கொண்ட ஆசியாவே போற்றும் கிராமமாக அது சிறந்து விளங்குகிறது.
அது உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் தோரா மாபி என்ற கிராமம்தான் அது.இக்கிராமத்தில் தடைபடாத மின்சாரம், தங்குதடையற்ற குடி நீர், ஆங்கில வழி பள்ளிகள், கல்லூரிகள் அங்குள்ளன. மேலும் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் பெரும்பாலும் கல்வியறிவு பெற்றவர்கள். இப்படி அதிக எழுத்தறிவு பெற்ற கிராமம் இந்தியாவிலேயே ஏன் ஆசியாவிலேயே கூட கிடையாது என்ற பெருமை பெறுகிறது.
2002 ஆம் ஆண்டில் 75 சதவீத எழுத்தறிவு பெற்ற இக்கிராமம் லிம்கா புத்தகத்தில் தனது சாதனையைப் பதிவு செய்துள்ளது. தற்போது உலக கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்ய அதன் எழுத்தறிவை அதிகரிக்கும் பணியில் அக்கிராமம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.இக்கிராமம் பிரபலமான அலிகார் பல்கலைக்கழகத்திலிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தில் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்கிராமம், தேவையான அனைத்து வசதிகளுடன் தன்னிறைவு அடைந்துள்ளது. இருந்தும் இக்கிராமம் இன்னும் அலிகார் நகரத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்படவில்லை. ஆனால் அலிகார் நகரத்துடன் இக்கிராமத்தை இணைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே சிறந்த கல்விக் கிராமமாக இது பெருமை பெற்றுள்ளதுபோல் மற்ற கிராமங்களும் தரத்தில் சிறந்து விளங்க வேண்டும். ‘ஆசியாவின் சுத்தமான கிராமம்’ என்ற பெருமையை 2003 ஆம் ஆண்டில் மேகாலாயாவைச் சேர்ந்த மாவ்லின்னோங் என்ற சிற்றூர் பெற்றது.
பிகார் மாநிலத்தின் தர்னாய் என்ற கிராமம் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் முதல் ஊர் என்ற பெருமையை பெற்றுள்ளது.குஜராத்தின் புன்சாரி கிராமம் வைஃபை, சிசிடிவி கேமராக்கள், ஏசி வகுப்பறைகள் எனச் ஜொலிக்கின்றன.
உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட மேற்கண்ட இந்திய கிராமங்களின் வளர்ச்சி ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைக்கிறது. அதேவேளை இன்னும் மிச்சமுள்ள நம் இந்திய கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். அதுபற்றி சிந்திப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அனைத்து கிராமங்களும் மேற்கண்ட கிராமங்கள் போல் வளர்ச்சியடையும் வரை அதன் வளர்ச்சிக்காக நாம் குரல் கொடுப்பது அவசியம்.