திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி பி. சுசீலா, இதுவரை 17,695 பாடல்கள் தனியாகப் பாடி “கின்னஸ்” சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது. தேனினும் இனிய தனது குரலால், காலத்தால் அழியாத, நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பி. சுசீலா. தமிழில் மாத்திரமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இவர் பாடியிருக்கிறார். ஆறு முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, பத்ம பூஷண் விருது ஆகிய பல விருதுகளை ஏற்கனவே பெற்றவர் இவர். “கின்னஸ்” சாதனையில் இடம் பிடித்துள்ள தமிழிசைப் பாடகி பி. சுசீலாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அது போலவே நேற்றையதினம் டெல்லியில் 63வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் சிறந்த பின்னணி இசைக்காக, ஐந்தாவது முறையாக இசைஞானி இளையராஜா, துணை நடிகர் சமுத்திரக்கனி, தமிழ் திரைப்படம் “விசாரணை”க்காக மூன்று விருதுகள், படத் தொகுப்பாளர் விருது மறைந்த கிஷோருக்கும், நடிகை ரித்திகா சிங், ஸ்ரீனிவாஸ் மோகன் மற்றும் பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.மத்திய அரசின் திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும், சிறப்பாக இசைஞானி இளையராஜாவுக்கு எனது இதயம் நிறைந்த நல் வாழ்த்துகளை வழங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.