
பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்தமுறை உச்ச நீதிமன்ற உத்தரவால், நடத்தப்பட முடியவில்லை. இதற்கு தமிழகம் முழுதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடுத்த அமைப்புகளுக்கு இன்று ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், “இது தொடர்பாக வழக்கு தொடுப்பது என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடன் அனுமதி பெற வேண்டும் என்று 2012ம் ஆண்டே விதி கொண்டுவரப்பட்டது. ஆனால் இதை மீறி தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்திருந்திருக்கிறீர்கள். உங்களுக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் மக்கள் கொதித்துப்போயிருந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டிலிருந்தே விதி இருக்கிறது என்றால், அந்த அமைப்புகள் வழக்கு தொடர்ந்த போது ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. தற்போது தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படுவது அரசியல் காரணத்துக்காகவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Patrikai.com official YouTube Channel