house
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அடிப்படையில் அனுமதி வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. வழக்குகளில் முக்கியமாக வலியுறுத்தப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கோரிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ், “ஆந்திர மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவரும் வரை இந்த வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.
வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விஜயன் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் எதிர்த்து வாதிட்டனர்.அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்தும், தமிழகத்தில் பின்பற்றப்பட்டுவரும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டம் குறித்தும் முடிவு செய்யும் வகையில் விரிவான வாதங்களை முன் வைப்பதற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.