news_24-03-2016_76vijayakanth
மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தபோது, ‘’இது கேப்டன் விஜயகாந்த் அணி’’என்று இனி அழைக்கப்படும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை ஆமோதித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மறுதினம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிடம், ‘’உங்கள் அணி விஜயகாந்த் அணியா?’’ என்று எழுப்பிய கேள்விக்கு, ‘’விஜயகாந்த் அணி என்று நானும் சொல்லவில்லை. அவரும் சொல்லவில்லை’’ என்றார்.
ஒரே கூட்டணிக்குள் இருக்கும் ஒரு கட்சித்தலைவர் இப்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், ‘’மக்கள் நலக்கூட்டணி என்று அழைத்தால் கிராமத்தில் உள்ள மக்களுக்கு புரியாது. விஜயகாந்த் அணி என்று அழைத்தால் எல்லோருக்கும் எளிதில் புரிந்துவிடும். அதனால்தான் அண்ணன் வைகோ, விஜயகாந்த் அணி என்று வைத்தார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், இன்று மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி்யின் பெயர் குறித்த கேள்வி எழுந்தபோது, ‘’கடந்த 23ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவும் மக்கள் நலக்கூட்டணியும் இணைந்தபோது, அனைத்து தலைவர்களும் கையெழுத்திட்ட ஒப்பந்த பந்திரத்தில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி என்றுதான் உள்ளதே தவிர, விஜயகாந்த் அணி என்று இல்லை. ஒப்பந்தத்தில் உள்ளபடிதான் கூறமுடியும். விஜயகாந்த் அணி என்று கூறமுடியாது’’ என்றார் அதிரடியாக.
இதையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை’’ என்று கூறினார்.
ஒரே கூட்டணியில் இருக்கும் தலைவர்களின் மாறுபட்ட கருத்தால், தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியை என்ன பெயரில் அழைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.