karunanidhi-stalin
தி.மு.க. மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியபோது, ’’பல்வேறு தரப்பு மக்களையும் நான் சந்தித்து பேசியிருக்கிறேன். மாணவ-மாணவிகளாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் முதுகெலும்பு. நீங்கள் ஒருங்கிணைந்தால் நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதை தி.மு.க. செய்து காட்டும். இன்றைக்கு நாட்டில் பல பதவிகளுக்கு முன்னேறியவர்கள் எல்லாம் மாணவர்கள்தான். ராஜாஜி ஒரு மாணவர், அண்ணா ஒரு மாணவர், காமராஜர் ஒரு மாணவர், நம்மை வழிநடத்தும் கலைஞர் ஒரு மாணவர், நானும் ஒரு மாணவன் தான். தி.மு.க. மாணவன். கலைஞர் என்னும் கல்லூரியில் படிக்கும் மாணவன். நான் கலைஞரின் ரத்தம். அந்த உணர்வோடுதான் உங்களை சந்தித்து பேசுகிறேன். தி.மு.க.வையும், மாணவர்களையும் யாராலும் பிரிக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தனது பேச்சில், ‘’கலைஞரைப்போல் யாரும் பேச முடியாது. 1971-ல் தி.மு.க. தேர்தல் களத்தில் நின்றபோது முரசே முழங்கு என்ற நாடகத்தில் நடித்தேன். கலைஞரைப்போல் பேசுவதற்காக புளியம்பழங்களை சாப்பிட்டேன்’’என்று குறிப்பிட்டார்.