Pondicherry-Assembly1
புதுச்சேரி மாநிலத்தில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக பொது மற்றும் தனியார் இடங்களில் பொதுமக்களின் பார்வையில் படும்படி சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஒட்டுவது, கட்-அவுட்டுகள், கொடிகள், பேனர்கள் வைப்பது ஆகியவை தேர்தல் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கியமான ஒன்று என்னவென்றால், சுக துக்க நிகழ்ச்சிகளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சுந்தரவடிவேலு சு. சுந்தரவடிவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’ பொதுக்கூட்டங்கள், சுக துக்க நிகழ்ச்சிகளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். புதுச்சேரி திறந்தவெளி அழகியல் சீர்கேடு தடுப்புச் சட்டம் 2000-ன் படி இந்த செயல்களும் குற்றமாக கருதப்படும். எனவே அத்தகைய அழகியல் சீர்கேடுகளை செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் சுவரொட்டிகளை அச்சிடாமல் இருக்கும்படி அச்சக உரிமையாளர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அழகியல் சீர்கேடுகளை செய்தவர்கள் உடனடியாக அகற்றவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவரொட்டிகளை அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.