தமிழ்நாட்டில் 62, 500 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் சென்னை மாவட்டம் முதலிடம் பெறுவதாகவும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
15 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு நடத்தப்படும் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவர அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 5480 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது மாநில அளவில் முதலிடம் ஆகும். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 3025 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா சுமார் 2000 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
கிராமப்புறங்களில்தான் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு இல்லை. எனவே அங்குதான் குழந்தை திருமணங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதேவேளை நகர்ப்புறங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதால் இந்த எண்ணிக்கை இங்கு அதிகமாக தெரிவதாக குழந்தை திருமணங்களுக்கு எதிராக செயல்படும் சமூல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பின் தங்கிய மாநிலங்களான உ.பி., பிகார் போன்ற மாநிலங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் அறியமுடிகிறது. அதேவேளை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கருவுற்ற தாய்மார்களின் எண்ணிக்கை 82.52 லட்சம் பேர் என்றும் அவர்களில் 62,500 பேர் 15 வயதுக்கு குறைவான வயதிலேயே திருமணம் முடித்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இப்புள்ளி விவர அறிக்கையில் விதவைகள் மற்றும் கணவரைப் பிரிந்து
வாழ்பவர்களும் இடம் பெற்றுள்ளனர்.குழந்தை திருமணம் செய்தவர்களில் 16 , 855 பேர் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
” வறுமையான குடும்பச் சூழலில் உள்ள பெற்றோர்களே தங்கள் மகள்களுக்கு இளம் வயது திருமணத்தை நடத்துகிறார்கள். கோவை அருகே ஆலந்துறை என்ற கிராமத்தில் பெண் பூப்பெய்தி விட்டால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்று கருதி பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றனர் என்கிறார் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு செயற்பாட்டாளர் காமராஜ்.
” சத்தியமங்கலம் அருகே உள்ள குந்திரி கிராம பெண் குழந்தைகளின் சூழ் நிலையும் இதேபோல்தான் உள்ளது. அதாவது இக்கிராமத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில்தான் மேல் நிலைப்பள்ளி இருக்கிறது. அதுவும் சரியான மலைக் காட்டுப் பகுதி. இப்பகுதியை கடந்து பெண் குழந்தைகளால் எப்படி மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லமுடியும்?,. எனவே இக்கிராம பெண் குழந்தைகள 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்ககூடிய சூழல் உள்ளது. அப்படி படிக்கும் கால கட்டத்திலேயே திருமணம் முடித்து வைத்து விடுகின்றனர் என்று கவலைப்படுகிறார் மற்றொரு செயற்பாட்டாளரான டி.ராஜன்.
குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து அளவில் ஒரு கண்காணிப்பு குழு உள்ளது. மக்கள் தொகை புள்ளிவிவரத்தின் மூலம் வெளியான குழந்தை திருமண அதிகரிப்புத் தகவலை அடுத்து இதைத்தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கிராமக் கண்காணிப்புக் குழுக்களின் கவனத்துக்கு வராமலேயே பெரும்பாலான குழந்தை திருமணங்கள் நடந்தேறி விடுகின்றன என ஆதங்கப்படுகிறார் கோவை சைல்ட்லைன் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி.