திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிளின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.
* இன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்ன?
புதுவை உள்ளிட்ட மற்றும் தமிழகத்திலே உள்ள 65 கழக மாவட்டச் செயலாளர்கள் இன்றைய கூட்டத்தில், தலைமைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயம், விரைவில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலைப் பற்றித்தான் விவாதிக்கப்பட்டது.
* தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். இந்த நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
நான் தெரிவித்த நம்பிக்கையை என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இழந்து விடவில்லை.
* கடந்த முறை கூட்டணி காரணமாக தி.மு. கழகம் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடக் கூடிய நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் எத்தனை இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது?
இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களையெல்லாம் அழைத்து, தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து, உங்களிடம் எல்லாவற்றையும் விவாதித்து எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று நான் சொல்வது எனக்கும் நாகரிகமல்ல; கேட்பது உங்களுக்கும் நாகரிகமல்ல.
* தே.மு.தி.க. வோடு நம்பிக்கை இழந்து விடவில்லை என்று சொன்னீர்கள். அவர்கள் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது? எப்போது கூட்டணி சம்மந்தமாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்?
நான் எந்த மாதத்தில், எந்தத் தேதியில் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போது அறிவிப்பு என்றும் நாள் குறித்துச் சொல்ல முடியாது. வரலாம்.
* தி.மு.க. வின் தேர்தல் அறிக்கை எப்போது வெளி வரும்?
விரைவில்