கராச்சி:
பாகிஸ்தானில், 1998 கணக்கெடுப்பின் படி, 2.7 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள , மிக பெரிய மத சிறுபான்மையினர் இந்துக்கள்தான். இவர்களில் பெரும்பான்மையோர் சிந்து மாநிலத்தில் வாழ்கின்றனர்.
சிறுபான்மை உரிமை கோரும் குழுக்களின் அறிக்கை படி, இங்குதான் இந்துக்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதும், அவர்களை கடத்திக்கொண்டு செல்வதும் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக இந்து பெண்களை கடத்திசெல்வதும், அவர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதையும் பற்றி கவலை வெளியிட்டது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்து பகுதியில் சுமார் இந்து 29 ஆண்கள் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஏராளமான இந்து பெண்கள் இஸ்லாமுக்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்,” என்று பிதன்பர் சேவானி என்ற சிந்து சிறுபான்மை எம்பிஏ ஏற்கெனவே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் சிந்து வடக்கு சிந்து மாகாணத்தில் ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் மூன்று இந்துக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்படி இந்த படுகொலை நடந்தது. இவர்களைக் கொல்ல ஒரு முஸ்லிம் மத குரு உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவியது.
மூவரின் இறுதி சடங்கு முடிந்ததும் சிந்து மாகாணம் முழுவதும் இந்து சமூகத்தினர் தங்கள் எதிர்ப்பை காட்ட தங்கள் வியாபார நிலையங்களை மூடினர். மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்தனர். “இது முதல் சம்பவம் அல்ல. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக சிந்து மாநிலத்தில், மதவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன,” என்று பாக்கிஸ்தான் இந்து மதம் கவுன்சில் தெரிவித்தது.
இந்துக்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்களை நீக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான மத வன்முறையை தக்கபடி தண்டிக்க வேண்டும் என்றும் மனித உரிமை குழுக்கள் கோரி வருகின்றன.
இந்த நிலையில் “பாகிஸ்தானியர்கள் அனைருக்கும் இங்கு வாழ உரிமை உண்டு. அவர்கள் மத வேறுபாடுகள் இன்றி சரிசமமாக நடத்தப்படுவார்கள்” என்று சிந்து மாகாண அரசு அறிவித்துள்ளது.
அதோடு வரும் மார்ச் 24ம் தேதி வரவிருக்கும் ஹோலி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கும் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அரசு விடுமுறைகள் அங்கு வாழும் இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசே, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு உதவுகிறதோ என்கிற அச்சம் தற்போது குறைந்திருப்பதாக அங்கு வசிக்கும் இந்துக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.