“டேட்டா சென்டர்கள் வந்தால் கோடி கோடியாக வருமானம் வரும், வளர்ச்சி பெருகும்” என்று அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஹென்ரிகோ கவுண்டி மகிழ்ச்சியாக 37 டேட்டா சென்டர்களுக்கு வரவேற்பு கொடுத்தது.
ஆனால் இப்போது நிலைமை என்ன தெரியுமா? பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மின்விளக்குகளை சீக்கிரமே அணைக்கச் சொல்லும் அளவுக்கு மின்கட்டணம் 25 சதவீதம் உயர்ந்துவிட்டது!
“விளக்குகளை அணையுங்கள், கணினிகளை நிறுத்துங்கள், சார்ஜர்களை கழற்றுங்கள், ஹீட்டர்களைப் பயன்படுத்தாதீர்கள்” என்று அதிகாரிகள் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். காரணம், ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 5 மில்லியன் டாலர் மின்சாரச் செலவு.

டேட்டா சென்டர்கள் வருவதால் வருமானம் கிடைத்தது உண்மைதான். அந்த வருவாயில் வீட்டு வசதி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஆனால் அதே நேரத்தில், அவற்றின் மின்சாரத் தேவை மின் வலையமைப்பின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
மின்சார சந்தை ஆய்வாளர்கள் கூறுவதன்படி, டேட்டா சென்டர்களின் அதிகரித்த தேவையால் மொத்த மின்சார விலையும் திறன் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் சுமை பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் போன்ற பொதுச் சேவைகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு டேட்டா சென்டர் துறையினர், “நாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான முழு கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம்; எங்களை மட்டும் குறை சொல்ல முடியாது” என்று பதிலளிக்கின்றனர்.
மொத்தத்தில், “வருமானம் வரும்” என்று கதவைத் திறந்தவர்கள், இப்போது “மின்விளக்கை அணைத்துவிட்டு வெளியே போங்கள்” என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]