2026 ஜனவரி 22ம் தேதி பிரதமரால் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பெறப்பட்ட நன்கொடை தொகை மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தினமும் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நன்கொடை பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT), வங்கி அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின் போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் வங்கி கணக்குகளுக்கு தினமும் சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை நன்கொடைகள் வந்துள்ளன. ஆனால் மோசடி விவகாரம் வெளிப்பட்ட பிறகு இந்த தொகை திடீரென ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தினமும் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நன்கொடை பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
ராமர் கோயிலில் உள்ள நன்கொடை உண்டியல்களில் சேகரிக்கப்படும் பணத்தை எண்ணும் பொறுப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏற்றிருந்தது. இதற்காக ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்பட்டது.
நான்கு உண்டியல்களில் இருந்து பணத்தை எடுத்து எண்ணுவதற்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் 11 பேர் வங்கி ஊழியர்களும், 3 பேர் அறக்கட்டளை பிரதிநிதிகளுமாக இருந்தனர்.
விசாரணையில் சில எஸ்பிஐ ஊழியர்களின் செயல்பாடுகளும் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவ், பணம் எண்ணும் பணிகளை மேற்பார்வை செய்ததாக கூறப்படுகிறது. உண்டியல்களில் இருந்து பணத்தை எடுத்து எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதும், பின்னர் வங்கிக்கு ஒப்படைப்பதும் அவரது பொறுப்பாக இருந்தது.
மேலும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளுக்கு முறையான பதிவுகள் இல்லாததால் அவற்றை திருடுவது எளிதாக இருந்ததாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மோசடி முதன்முதலில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது பணம் எண்ணும் குழுவில் இருந்த ஒருவர், பணம் திருடப்படுவதாக சுபாஷ் ஸ்ரீவாஸ்தவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு, “கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். திருடப்படும் பணம் உன் வீட்டு பணமோ என் வீட்டு பணமோ இல்லை” என்று அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இதுவரை சுபாஷ் ஸ்ரீவாஸ்தவ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவினாஷ் ஷுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, டின்னு யாதவ், லவ்குஷ் மிஸ்ரா, மனீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே மற்றும் ராமசங்கர் மிஸ்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் SIT குழு விரிவான விசாரணை நடத்தியது. அறக்கட்டளை மற்றும் வங்கி இடையிலான ஒப்பந்த விதிமுறைகள் ஏன் முழுமையாக பின்பற்றப்படவில்லை, விதிகளில் ஏன் மாற்றங்கள் செய்யப்பட்டன, முறைகேடு குறித்த சந்தேகங்கள் எழுந்தபோதும் ஏன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பன குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு பணம் எண்ணுவது போன்ற முக்கிய பொறுப்பு ஏன் வழங்கப்பட்டது என்பதையும் SIT விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் இறுதி அறிக்கையில் வங்கி ஊழியர்களின் பங்கு குறித்து குறிப்பிடப்படலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]