பிரிட்டன் பிரதமரும், தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவருமான கியர் ஸ்டார்மர் தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது இரண்டு ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

லண்டனில் உள்ள பிரதமர் இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டார்மர், “அடுத்த பொதுத் தேர்தலுக்கு தொழிலாளர் கட்சியை வழிநடத்த சரியான நபர் நான்தானா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை நான் கேட்டுவிட்டேன். எனவே நான் ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

2024 ஜூலை மாதம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்த நாள் தனது வாழ்க்கையின் மிகப் பெருமையான தருணம் என்றும் அவர் கூறினார்.

மேலும், “நான் பொறுப்பேற்றபோது தொழிலாளர் கட்சி அரசியல், நிதி மற்றும் நெறிமுறை ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. கட்சி முடிந்துவிட்டது என்று பலர் கூறினார்கள். ஆனால் அதை தவறு என்று நிரூபித்தேன்” என்றார்.

கட்சிக்குள் இருந்த யூத எதிர்ப்பு மனப்பான்மையை ஒழித்து, கட்சியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜினாமா முடிவை இன்று காலை மன்னரிடம் தெரிவித்ததாக கூறிய ஸ்டார்மர், புதிய தலைவர் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 9 முதல் தொடங்கும் வகையில் கட்சியின் தேசிய செயற்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தனக்குப் பிறகு பொறுப்பேற்கும் தலைவருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்றும், அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெற தேவையான அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

உரையின் இறுதியில், “நாட்டின் மிகப் பெரிய பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான பொறுப்பான நல்ல கணவராகவும், நல்ல தந்தையாகவும் இருப்பதற்கு அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்” என்று கூறினார்.

பின்னர் தனது மனைவியை கட்டியணைத்த ஸ்டார்மர், மீண்டும் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் சென்றார்.

[youtube-feed feed=1]