உலக நாடுகளின் மத்திய வங்கிகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை அமைப்புகள் தங்களின் தங்க இருப்புகளை சிங்கப்பூரில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) நவம்பர் 10-ம் தேதி இந்தத் தங்கச் சேமிப்புச் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக சிங்கப்பூரின் தேசிய நாணயப் பெட்டகத்தில் தங்கம் சேமிக்கப்படும். தற்போது இந்தப் பெட்டகத்தில் அதிகபட்சமாக 500 டன் தங்கத்தைச் சேமிக்க முடியும். தேவைக்கு ஏற்ப இதன் கொள்ளளவை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கான் கிம் யோங்

இதுகுறித்து சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நாணய ஆணையத்தின் தலைவருமான கான் கிம் யோங் கூறுகையில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. தங்களுடைய நிதி இருப்பைப் பாதுகாப்பதற்கும், முதலீடுகளைப் பல்வேறு வகைகளில் பிரிப்பதற்கும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் நாடுகின்றன என்றார்.

ஏற்கெனவே சில வெளிநாட்டு மத்திய வங்கிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர்களை வெளியிடவில்லை.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 2,000 டன்னுக்கும் அதிகமான தங்கத்தைச் சேமிக்கும் வசதிகள் உள்ளன. இவை தனியார் வங்கிகள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களுக்குப் பயன்பட்டு வருகின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி, வெளிநாட்டு மத்திய வங்கிகளுக்கான சேவையை விரிவுபடுத்தும்.

மேலும், ஆசிய நேரத்திலும் தங்க வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது தங்கத்தின் வர்த்தகம் மற்றும் விலை நிர்ணயம் பெரும்பாலும் லண்டன், நியூயார்க் நகரங்களைச் சார்ந்தே உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் பங்குச் சந்தை (SGX) தங்க வர்த்தகத்துக்கான பரிவர்த்தனைத் தீர்வு முறையை உருவாக்கி வருகிறது. இதற்காக டிபிஎஸ், டாய்ச் வங்கி, ஐசிபிசி ஸ்டாண்டர்டு வங்கி, ஜேபி மோர்கன், ஓசிபிசி, யுஓபி ஆகிய 6 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புதிய வர்த்தக முறை 2026 இறுதிக்குள் தயாராகும் என்றும், 2027 முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 12.4 கிலோ எடையுள்ள பெரிய தங்கக் கட்டிகள் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகள் வர்த்தகம் செய்யப்படும்.

மேலும், 2027-ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் ஒரு கிலோ தங்கத்துக்கான எதிர்கால வர்த்தக ஒப்பந்தத்தையும் அறிமுகப்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

தங்கச் சுத்திகரிப்பு, மறுவடிவமைப்பு, தரப் பரிசோதனை உள்ளிட்ட சில சேவைகளுக்கு நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படாத புதிய நடைமுறையும் 2027 ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் துபாய், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்களுக்கு இணையாக ஆசியாவின் முக்கிய தங்க வர்த்தக மையமாக சிங்கப்பூரை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.