தென் அமெரிக்க நாடான பராகுவேயில் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கியான ‘யூனோ வங்கி’யின் செயல்பாடுகளை மத்திய வங்கி முடக்கியதைத் தொடர்ந்து, சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது அந்நாட்டின் வயது வந்தோரில் சுமார் 60 சதவீதம் பேர் என்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 2-ம் தேதி யூனோ வங்கியின் நிதிநிலையை ஆய்வு செய்த பராகுவே மத்திய வங்கி, அதன் கடன் தகுதி விகிதம் 5.56 சதவீதமாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தது. வங்கிகள் கட்டாயம் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச விகிதம் 12 சதவீதம் ஆகும். மேலும், கடன் வழங்குவதில் முறைகேடுகள், உரிமையாளர் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகளை முடக்கி, அதன் நிர்வாகத்தை மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இதனால் வங்கியின் மொபைல் செயலி, ஏடிஎம், டெபிட் கார்டு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு வாடிக்கையாளர்களின் பணம் முடக்கப்பட்டது. இதையடுத்து தலைநகர் அசுன்சியோனில் வங்கிக்கு வெளியே திரண்ட மக்கள், தங்களது சேமிப்புப் பணத்தை உடனடியாகத் திருப்பித் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

இதற்கிடையே, வங்கியின் நிறுவனர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்ய அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கியின் நிதிநிலை மோசமடைந்தது தொடர்பாக குற்றவியல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சியாக, யூனோ வங்கியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கார்லோஸ் கார்வல்லோ, பின்னர் மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். வங்கியின் மேற்பார்வை தொடர்பாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிபர் சாண்டியாகோ பென்யாவின் கோரிக்கையைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், வங்கி தொடர்பான நடவடிக்கைகள் முடியும் வரை அவர் பொறுப்பில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், யூனோ வங்கியின் உரிமையாளர் குழுமத்தில் அதிபர் பென்யாவுக்கும் கடந்த 2025 மார்ச் மாதம் வரை பங்குகள் இருந்ததாகக் கூறப்படுவது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிபர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் பணம் என்னவாகும்?

வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டெபாசிட் காப்புறுதி நிதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கு அதிகபட்சமாக 22.83 கோடி குரானி (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 லட்சம்) வரை பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களில் சுமார் 97 சதவீதம் பேரின் டெபாசிட்கள் இந்த உத்தரவாத வரம்புக்குள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 மில்லியன் குரானி (சுமார் ரூ.1.2 லட்சம்) வரை வழங்கவும், மீதமுள்ள உத்தரவாதத் தொகையை அடுத்தகட்டமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்படி 15 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கலாம்.

ஆனால், உத்தரவாத வரம்பைத் தாண்டி அதிக தொகை டெபாசிட் செய்தவர்களுக்கு முழுப் பணமும் திரும்பக் கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்த வங்கியில் அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான ஐபிஎஸ் (IPS) சுமார் 355 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. மேலும், சுமார் 32,000 ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியப் பணப் பரிவர்த்தனைகளையும் இந்த வங்கி கையாண்டு வந்தது. இதனால் வங்கி முடக்கம் தனிநபர்களின் சேமிப்பைத் தாண்டி அந்நாட்டின் பொதுநிதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்தச் சம்பவம் தனிப்பட்ட வங்கியின் நிதி நெருக்கடி என்றும், நாட்டின் பிற வங்கிகள் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் பராகுவே வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.