ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகள் இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக் கோடுகளுக்கு இடையில் இருப்பது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட “Correct the Map” தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தை டோகோ முன்மொழிந்ததுடன், ஆப்பிரிக்க யூனியனும் ஆதரித்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய கோடுகள்
2026 ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஐ.நா. உலக வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அசாம் மாநில எல்லை “சீனக் கோடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அருணாச்சலப் பிரதேசத்துக்கும் நாகாலாந்துக்கும் இடையிலான மாநில எல்லை வரைபடத்தில் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் சீனாவின் திபெத் பகுதியை ஒட்டியுள்ள எல்லை “இந்தியக் கோடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அருணாச்சலப் பிரதேசம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வெவ்வேறு உரிமைக் கோடுகளுக்கு இடையில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்சாய் சின் பகுதியிலும் தனித்தனி கோடுகள்
இதேபோல், அக்சாய் சின் பகுதியின் கிழக்குப் பகுதிகள் “இந்தியக் கோடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், லடாக் மற்றும் அக்சாய் சின் இடையே ஒரு “சீனக் கோடு” இருப்பது போன்றும் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அக்சாய் சின் லடாக்கின் ஒரு பகுதி என்பதே இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கட்டுப்பாட்டு கோடும் (LoC) புள்ளிக் கோடாக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரைபடத்தின் இடதுபுறத்தில், இந்தப் புள்ளிக் கோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கோட்டை தோராயமாகக் குறிக்கிறது என்றும், ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதிகளில் இந்தியா, சீனா என தனித்தனி உரிமைக் கோடுகள் ஏன் காட்டப்பட்டுள்ளன என்பது குறித்து வரைபடத்தில் எந்த விளக்கமும் இடம்பெறவில்லை.
“இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே காட்ட வேண்டும்”
“Correct the Map” தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தாலும், அது எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரைபடத்தையோ, எல்லை வரையறையையோ ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
செப்டம்பர் 6-ம் தேதி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில்:
“ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே காட்டப்பட வேண்டும். தவறான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் காட்டப்படுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.
எனினும், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதிகளில் இந்தியா, சீனா என தனித்தனி உரிமைக் கோடுகள் காட்டப்பட்டிருப்பது குறித்து தி இந்து எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்தியாவின் பாரம்பரிய வரைபடத்தில் எப்படி உள்ளது?
இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசமும், முழுமையான ஜம்மு-காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளாகவே காட்டப்படுகின்றன.
அதே நேரத்தில், இந்தியா–நேபாளம் இடையே நீண்டகாலமாக சர்ச்சையில் உள்ள கலாபானி எல்லைப் பிரச்சினையில், புதிய ஐ.நா. வரைபடம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது.
குறிப்பாக கலாபானி–லிபுலேக்–லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்றே வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை நேபாளமும் தனது நாட்டின் பகுதிகள் என்று உரிமை கோரி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், நேபாளத்தின் புதிய அரசு லிபுலேக் பகுதி தொடர்பாக இந்தியாவிடம் தனது உரிமைக் கோரிக்கையை மீண்டும் தெரிவித்திருந்தது. திபெத் மற்றும் கைலாஷ் மானசரோவர் பகுதிகளுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான போக்குவரத்துக்கு இந்தியா லிபுலேக் பாதையைப் பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு, இந்தியா 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த பின்னர் வெளியிட்ட புதிய அரசியல் வரைபடத்துக்கும் நேபாளம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஐ.நா. புதிய உலக வரைபடம் குறித்து நேபாளம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.