“கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் பேசியுள்ளார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காவல்துறை, மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார். அப்போது திமுக ஆட்சியை விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க முயன்றார். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“நாங்கள் முதலமைச்சரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்களது கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல், திமுக மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை பேரவையில் முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம். முதலில் பேச வாய்ப்பு தருவதாக பேரவைத் தலைவர் கூறிவிட்டு, பின்னர் அனுமதி மறுத்துவிட்டார். இதற்கு முதலமைச்சரின் அழுத்தமா அல்லது அதிகாரிகளின் அழுத்தமா என்று தெரியவில்லை.
அதே ஆக்டிங், பன்ச் டயலாக் என ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் பேசியுள்ளார். ஒப்புவித்தல் போட்டியில் பேசுவது போல பேரவையில் தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். திமுக ஆட்சி நடக்கிறது என்ற எண்ணத்தில் முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து பேசாமல், 1970-ம் ஆண்டுக்குச் சென்று மிசா, சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் விசாரணைக்குப் பிறகும் திமுக 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது.
கொடநாட்டில் தனது படத்தின் ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். எனவே, மிசா குறித்தோ, எங்கள் தலைவரைப் பற்றியோ பேச அவருக்கு ஒரு சதவீதம் கூட தகுதி இல்லை.
முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்துதான்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.