தமிழகத்தின் கடலோர மணல் திட்டுகளில் புதிய மூலிகை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Leucas droupadiae’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரம், கடலூர் அருகே கொரோமண்டல் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தாவரத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

என்ன சிறப்பு?
சுமார் 15 செ.மீ. உயரம் வளரும் இந்த மூலிகை, கிளைகள் இல்லாமல் நேராக வளரக்கூடியது. மற்ற லியூகாஸ் வகை தாவரங்களைப் போல ஆழமான வேர்களைக் கொண்டிருக்காமல், மேலோட்டமாக வலைபோன்ற வேர்களைக் கொண்டுள்ளது.
மேலும், இதன் பழங்கள் தங்க மஞ்சள் நிறத்திலும், அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடனும் காணப்படுகின்றன. இந்த தனித்துவமான அம்சங்களே மற்ற தாவரங்களில் இருந்து இதை வேறுபடுத்துகின்றன.
புதிய தாவரத்தை கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு தாவரம் புதிய இனம் என்பதை உறுதி செய்வது எளிதானதல்ல. அதன் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைச் சுழற்சியை நீண்ட காலம் ஆய்வு செய்து, உலகம் முழுவதும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தாவரங்களுடன் ஒப்பிட வேண்டும்.
லியூகாஸ் இனத்தில் (தும்பை வகை) ஏற்கனவே 155 தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எதனுடனும் ஒத்துப்போகவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, இது புதிய இனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணல் திட்டுகள் ஏன் முக்கியம்?
கடலோர மணல் திட்டுகள் பார்ப்பதற்கு வெறும் மணல் பகுதிகள் போல தெரிந்தாலும், அவற்றில் தனித்துவமான பல தாவரங்களும் உயிரினங்களும் வாழ்கின்றன. மேலும், கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும் மணல் திட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தாவரத்துக்கு அச்சுறுத்தல்
தற்போது கடலூரில் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் மேய்வதும், அருகில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுவதும் இதன் வாழிடத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
இதன் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்து போதிய தகவல்கள் இல்லாததால், இந்தத் தாவரம் தற்போது ‘தகவல் போதவில்லை’ (Data Deficient) என்ற நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மூலிகையைப் பாதுகாக்க, அதன் எண்ணிக்கையை கணக்கிடுதல், கால்நடைகள் மேய்வதைத் தடுப்பது, அருகிலுள்ள யூகலிப்டஸ் மரங்களை கட்டுப்படுத்துவது மற்றும் அதன் வாழிடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் தேவை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.