ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் இருவர் மலேரியா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் மூலம் விமான நிலையத்துக்குள் வந்த கொசுக்களால் மலேரியா பரவியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 2 பேர் தற்போது உயிரிழந்துள்ளார். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானத்தில் வந்த கொசுக்கள் விமான நிலையத்தில் பரவியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து விமான நிலையம் முழுவதும் கொசுக்களைப் பிடிக்க பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கொசுக்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவை எந்த வகையைச் சேர்ந்தவை, எங்கிருந்து வந்தவை என்பது கண்டறியப்பட உள்ளது.
விமான நிலையத்தை இயக்கும் Fraport நிறுவனம், “ஒரு ஊழியர் தொற்று காரணமாக உயிரிழந்ததை வருத்தத்துடன் உறுதி செய்கிறோம். அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மலேரியா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் அரிதான சம்பவம்
பொதுவாக மலேரியா பாதிப்பு உள்ள நாடுகளுக்குச் சென்று திரும்பும் பயணிகளுக்கே ஜெர்மனியில் மலேரியா கண்டறியப்படுகிறது. ஜெர்மனிக்குள்ளேயே கொசு மூலம் மலேரியா பரவுவது மிகவும் அரிதானது என அந்நாட்டு ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 4 விமான நிலைய ஊழியர்களுக்கு மலேரியா பாதிப்பு இருப்பது முதலில் தெரியவந்தது. அவர்கள் ஜூலை 4 முதல் 6-ம் தேதிக்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2023-ம் ஆண்டிலும் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இதேபோன்ற ‘Airport Malaria’ பாதிப்பு பதிவாகியிருந்தது.
மலேரியா என்பது குறிப்பிட்ட வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் ஒட்டுண்ணி நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் மலேரியா, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.