நேபாளம்–சீனா திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 40 இந்தியர்கள் உள்ளிட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைக் காணவில்லை. மண், பாறைகள் மற்றும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 26-ம் தேதி இமயமலைப் பகுதியில் உள்ள நேபாளம்–திபெத் எல்லையில், மலைப்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறைகள் பெருமளவில் ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நேபாளத்தின் எல்லையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

340-க்கும் மேற்பட்டோர் மாயம்
நேபாள சுற்றுலாத்துறை வெளியிட்ட தகவலின்படி, 340 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 105 பேர் இந்தியர்கள், 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் அமெரிக்கர்கள் மற்றும் 12 பேர் பிரிட்டன் நாட்டவர்கள்.
மேலும், 11 மலேசியர்கள் தங்களது பயண நிறுவனங்களுடன் தொடர்பை இழந்துள்ளனர். நீர்மின் நிலையத்தில் பணியாற்றிய 8 தென் கொரியர்களையும் காணவில்லை. மேலும் 10 தென் கொரியர்கள் வெள்ளப்பகுதியில் சிக்கியுள்ளனர்.
கண் முன்னே அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள சியாப்ருபேசி மற்றும் திமுரே பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆற்றங்கரையோர குடியிருப்புகள் பல வெள்ளத்தில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மிதக்கும் கார்கள், இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் அடித்துச் செல்லப்படும் பாலங்களின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராசுவா மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் துலா பகதூர் பி.கே. கூறுகையில், “எங்கு பார்த்தாலும் பேரழிவுதான் தெரிகிறது. ஆற்றங்கரையில் இருந்த குடியிருப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எனது உறவினர்கள் 5 பேரையும் காணவில்லை” என்றார்.
நிலநடுக்கம் காரணமா?
இந்த திடீர் வெள்ளத்துக்கு சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வெள்ளம் ஏற்பட்டதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அப்பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் மற்றும் பாறைகள் சரிந்து ஆற்றை அடைத்திருக்கலாம் என்றும், பின்னர் அந்தத் தடுப்பு உடைந்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம்
ஆற்றின் மேல்பகுதியில் இன்னும் மண் மற்றும் பாறைகள் குவிந்து கிடப்பதால் மீண்டும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலைப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதும் கடினமாகியுள்ளது. வெள்ளம் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் மீட்பு ஹெலிகாப்டர்களால் சில பகுதிகளில் தரையிறங்க முடியவில்லை.
திபெத்திலும் பெரும் பாதிப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் சீனாவின் திபெத் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தின் கியிரோங் எல்லைத் துறைமுகம் அருகே சாலைகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனா குறைந்தது 574 மீட்புப் பணியாளர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. சில இடங்களில் சுமார் 1.5 மீட்டர் ஆழத்துக்கு மண் மற்றும் சேறு குவிந்திருப்பதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைய பல மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களை முழு வீச்சில் தேடும் பணியை மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலும் வெள்ள எச்சரிக்கை
நேபாளத்தில் இருந்து வரும் பல ஆறுகள் இந்தியாவுக்குள் பாய்வதால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்துக்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
430 மெகாவாட் மின்சாரம் பாதிப்பு
வெள்ளத்தால் நேபாளத்தின் நீர்மின் திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 430 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் மொத்தம் 3,200 மெகாவாட் அளவுக்கு நீர்மின் உற்பத்தி நடைபெறும் நிலையில், தற்போது ஏற்பட்ட பாதிப்பு அதன் 12 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள ராணுவமும் காவல்துறையும் மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளன. ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டும் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் மாயமாகினர். நேபாளம்–சீனாவை இணைக்கும் முக்கிய பாலமும் அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.