பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது சாக்கடைக் குழாய் அமைப்பதற்காகத் தோண்டியபோது, சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தின் ஈஸ்ட் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கழிவுநீர்க் குழாய் அமைப்பதற்காகத் தொழிலாளர்கள் கட்டடத்தின் அடித்தளச் சுவரைத் தோண்டியுள்ளனர்.
அப்போது, திடீரென சில தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை சாதாரண யூரோ நாணயங்கள் என முதலில் நினைத்த 18 வயது தொழிலாளி சம்மர் ஜாப், தொடர்ந்து தோண்டியபோது பெரிய அளவிலான தங்கக் கட்டிகளும் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பெல்ஜியத்தைச் சேர்ந்த விஆர்டி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:
“வேலை செய்துகொண்டிருந்தபோது தங்க நாணயங்கள் தென்பட்டன. முதலில் அவை சாதாரண நாணயங்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், தொடர்ந்து தோண்டியபோது தங்கக் கட்டிகள் கிடைத்தன. அதை எங்களால் நம்பவே முடியவில்லை” என்றார்.
இதையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்கு கிடைத்த தங்கத்தைப் பாதுகாப்பாகக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட புதையலில் 49 தங்கக் கட்டிகளும், பல வாளிகளில் அடங்கும் அளவுக்கு தங்க நாணயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.98 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் அந்தக் கட்டடத்தில் எதற்காகவும், எவ்வாறு வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதையல் கண்டெடுக்கப்பட்ட கட்டடம் பெல்ஜியத்தைச் சேர்ந்த சமூக நல அமைப்பான CAW-க்குச் சொந்தமானது. இந்த அமைப்பு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாக்கடைப் பணிக்காகத் தோண்டியபோது பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது