ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகும் பெரும்பாலான சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக வெளியாகும் ஆரம்பகட்ட ஆய்வுகளை வைத்து அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளன.
16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது. ஆனால், தடை அமல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகும் சுமார் 80 சதவீத சிறார்கள் சமூக ஊடகங்களில் இருப்பதாக ஆஸ்திரேலிய இணைய ஒழுங்குமுறை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தடை முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் YouTube-ன் தாய் நிறுவனமான Google, Facebook மற்றும் Instagram-ன் தாய் நிறுவனமான Meta, Snapchat, TikTok ஆகிய நிறுவனங்களின் ஆஸ்திரேலிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சமூக ஊடக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தை 99 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்த்துவது உள்ளிட்ட சட்டத் திருத்தங்கள் குறித்தும் குழு பரிசீலித்து வருகிறது. மேலும், விசாரணைகளின்போது சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்தும், வயது சரிபார்ப்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்தும் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பெற eSafety Commissioner-க்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆனால், சமூக ஊடகப் பயன்பாடு குறித்த தற்போதைய ஆய்வு முடிவுகளை வைத்து தடை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுவது சரியல்ல என்று YouTube தெரிவித்துள்ளது.
“இது ஆரம்பகட்ட நிலைதான். தற்போதைய தகவல்களை வைத்து அதிகமாக முடிவு எடுக்கக் கூடாது” என்று YouTube-ன் அரசு உறவுகள் பிரிவு தலைவர் ரேச்சல் லார்ட் கூறினார்.
மேலும், 16 வயது என்ற வரம்பில் பயனர்களின் வயதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Meta நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பொது கொள்கைத் தலைவர் மியா கார்லிக் கூறுகையில், ஆய்வுகளில் பங்கேற்றவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருந்தாலும், அவர்களுக்கு உண்மையில் அந்த தளங்களில் கணக்கு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியாது என்றார்.
இதற்கிடையே, வயது குறைந்தவர்கள் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்பட்ட 7.56 லட்சம் Instagram மற்றும் Facebook கணக்குகளை முடக்கியுள்ளதாக Meta தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருந்தது.
Google நிறுவனமும், 7.4 லட்சம் Google கணக்கு பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்தி YouTube-ஐ அணுகுவதைத் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
TikTok நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பொது கொள்கைத் தலைவர் ஜெசிகா லோஃப்ஸ்டெட் கூறுகையில், வயது குறைந்தவர்களைத் தடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். சட்டம் அமலுக்கு வந்தபோது 5.5 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மாதந்தோறும் சுமார் 24,000 கணக்குகள் நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக நிறுவனங்கள் விதிகளை அமல்படுத்துவதில் வேண்டுமென்றே தாமதம் செய்வதாகவும், இதனால் மற்ற நாடுகள் இதுபோன்ற தடைகளை அமல்படுத்துவதைத் தடுக்கும் முயற்சி நடப்பதாகவும் ஆஸ்திரேலிய eSafety Commissioner குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான நாடாளுமன்றக் குழு விசாரணையில் eSafety Commissioner ஆகஸ்ட் 14-ம் தேதி சாட்சியம் அளிக்க உள்ளார்.