உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தைகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க ராணுவம் பெரும் செலவினம் மேற்கொண்டு வருவதாகவும், அந்தச் செலவை ஈடுகட்டும் நோக்கில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இந்த 20 சதவீத கட்டணம் சரக்குகளின் மொத்த மதிப்பின் அடிப்படையிலா அல்லது வேறு எந்த அளவுகோலின் அடிப்படையிலா கணக்கிடப்படும் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், உலகளாவிய எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் கணிசமாக உயரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது பாரசீக வளைகுடாவில் இருந்து ஐரோப்பாவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை அனுப்ப சுமார் 10 டாலர் செலவாகிறது. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 80 டாலர் எனக் கணக்கிட்டால், 20 சதவீத கட்டணம் காரணமாக கூடுதலாக 16 டாலர் செலவாகும். இதனால் ஒரு பீப்பாய்க்கான மொத்த போக்குவரத்து செலவு 26 டாலராக உயரக்கூடும்.
சுமார் 20 லட்சம் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லும் பெரிய டேங்கர் கப்பல்களுக்கு இந்தக் கட்டணத்தால் 3 கோடி டாலருக்கும் அதிகமான கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் செலவின் ஒரு பகுதி இறுதியில் எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் மீது சுமத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், கப்பல் நிறுவனங்களின் தற்போதைய கவலை கட்டணம் மட்டுமல்ல. அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அவர்களை அதிகம் கவலையடையச் செய்கிறது. சமீப காலமாக அமெரிக்கா தனது கடற்படை பாதுகாப்பில் கப்பல்களை ஓமான் கடற்கரைக்கு அருகிலுள்ள பாதையில் இயக்கி வருகிறது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹோர்முஸ் ஜலசந்தி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் உரிமை தங்களுக்கே இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்தி ஈரானின் எதிர்வினையை சந்திப்பதா அல்லது அமெரிக்க விதிமுறைகளை பின்பற்றாமல் வேறு பாதையைத் தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் கப்பல் நிறுவனங்கள் உள்ளன. சமீபத்திய தாக்குதல்கள் காரணமாக இப்பகுதியில் செயல்படுவதில் கப்பல் உரிமையாளர்கள் மேலும் தயக்கம் காட்டலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சட்ட நிபுணர்களும் இந்த அறிவிப்பை கேள்விக்குறியாகப் பார்க்கின்றனர். சர்வதேச கடல் வழித்தடங்களில் வெறும் கடந்து செல்வதற்காக கட்டாய கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை என்பது தற்போதைய கடல்சார் சட்டத்தின் அடிப்படை கொள்கையாகும். இதற்கு முன்பு ஈரான் இதுபோன்ற கட்டணத்தை விதிக்க முயன்றபோது, அதனை அமெரிக்கா எதிர்த்திருந்தது. தற்போது அதே அமெரிக்கா பாதுகாப்பு செலவைக் காரணம் காட்டி கட்டணம் வசூலிக்க முன்வந்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவின அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கம் மற்றும் பல நாடுகளின் பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.