ஐதராபாத்: குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – துபாய் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித கூடுதல் கட்டணமின்றி மறுதேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ஈரான், அமெரிக்கா தளம் அமைத்துள்ள குவைத், சவூதி உள்பட பல்வேறு வளைகுடா நாடுகள் மீது தாக்கி, எண்ணை கிணறுகளை அழித்து வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையிலான விமான சேவைகள் தடைபட்டுள்ளன. ஏற்கனவே இண்டிகோ பல அட்டவணைகளை திருத்தியுள்ளது, அதே நேரத்தில் ஏர் இந்தியா துபாய் மற்றும் பிற UAE இடங்களுக்கு பல சேவைகளை ரத்து செய்துள்ளது. தற்போதைய பிராந்திய நெருக்கடிக்கு மத்தியில் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புக் கவலைகளைப் பின்பற்றி இடையூறுகள் ஏற்படுகின்றன. அட்டவணைகள் தொடர்ந்து மாறி வருவதால், பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து துபாய் சென்ற எமிரேட் விமானங்கள் நடுவழியில் திரும்பின. துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று காலை முதல் ஈரானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள எண்ணை கிணறுகள் தீப்பற்றி எரிகின்றன. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி விமான நிறுவனங்கள், துபாய்க்கு செல்லும் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்துச் செய்வதாக துபாய் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 242 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், துபாய் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலை அடுத்து மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து இந்திய நகரங்களுக்கும் இடையேயான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கான விமான சேவைகள், இந்திய நகரங்களில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான பயணத்துக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள், எவ்வித கூடுதல் கட்டணமின்றி மறுதேதி குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இல்லையென்றால், தங்களது பயண டிக்கெட்டை ரத்துச் செய்து முழுத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அபுதாபி ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் வழக்கம்போல் நடைபெறும்.
விமான சேவைகள் ரத்து தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் +9111693-29333, +9111693-29999 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம். அதேபோல், பயண டிக்கெட் ரத்து, தேதி மாற்றம் போன்ற தகவல்களுக்கு +9163600-12345 என்ற வாட்ஸ் அப் எண்ணையோ (அல்லது) http://airindiaexpress.com என்ற இணையதளத்தையோ அணுகலாம்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]