MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது கட்டுப்பாட்டை அதிகரித்து, அரசு ஆதரவு கொண்ட “தேசிய மெசேஜிங் ஆப்”பை முன்னிறுத்த ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கை, பயனர்களை அரசு கண்காணிப்பு உள்ள ஆப்பை பயன்படுத்த வைப்பதற்காகவே என வாட்ஸ்அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆப்பின் மூலம் பயனர்கள் கண்காணிக்கப்படலாம் என ஏற்கனவே விமர்சகர்கள் எழுப்பிய குற்றச்சாட்டை அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன.

“பயனர்கள் தொடர்பில் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யாவில் மட்டும் வாட்ஸ்அப் பயனர்கள் சுமார் 10 கோடி பேர் உள்ளனர். உலகளவில் மாதத்திற்கு சுமார் 300 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரெம்லின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், ரஷ்ய சட்டங்களுக்கு இணங்கி செயல்பட்டு, அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மெட்டா நிறுவனம் மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

“அப்படி நடந்தால் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் எந்த வாய்ப்பும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ரஷ்ய தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ரோஸ்கொம்நட்சோர் நடத்தும் ஆன்லைன் பட்டியலில் இருந்து வாட்ஸ்அப் நீக்கப்பட்டதாக பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம், ரஷ்ய அரசுக்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பும், மோசடி மற்றும் தீவிரவாத விசாரணைகளில் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்புகளின் சேவைகளை ரஷ்ய அரசு கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், ஆப்பிளின் FaceTime வீடியோ அழைப்பு சேவையும் தடை செய்யப்பட்டது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை முழுவதும் டெலிகிராம் பயன்பாட்டில் மெதுவான வேகம் மற்றும் பதிவிறக்க சிக்கல்கள் ஏற்பட்டதாக ரஷ்ய பயனர்கள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]