சென்னை: சென்னையில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பொதுமக்கள், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கும்படி தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் காகங்கள் போன்ற பறவைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், கால்நடைதுறை அதிகாரிகள் இறந்த காகங்களை சேகரித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பபி வைக்கப்பட்டது. அதில், காகங்கள் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. அதாவது உயிரிழந்த காகங்கள் H5N1 என்ற வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாகவே காகங்கள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் இறந்த காகங்களைத் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காகங்கள், கோழிகள், பறவைகள் மர்மமான முறையில் இறந்தால், அவற்றை வெறும் கையால் தொடக்கூடாது. குறிப்பாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில், அருகில் உள்ள கால்நடை மருத்துவத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , அரசு மருத்துவமனை , மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தங்கள் பகுதிகளில் அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் பொதுமக்கள் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ எ்ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
H5N1 வைரஸால் பரவும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு எளிதாகப் பரவாவிட்டாலும், பாதிப்பு ஏற்பட்டால் தீவிர நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இதன் பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, தலைவலி ஆகியவை காணப்படும்.
சிலருக்கு கண்கள் சிவத்தல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவையும் ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், நிமோனியா மற்றும் தீவிர மூச்சுக் கோளாறு போன்ற ஆபத்தான நிலைகளுக்கும் வழிவகுக்கும்.
இறந்த பறவைகளைத் தொட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அலட்சியம் காட்டக்கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது.
[youtube-feed feed=1]