ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது.
சோமுவில் உள்ள பேருந்து நிலையம் அருகே மசூதிக்கு வெளியே சாலையோரத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உள்ளூர் நிர்வாகம் முடிவெடுத்தது.

இது தொடர்பாக இரண்டு மதத்தினரிடையே மோதல் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே, நிர்வாகம் அப்பகுதியில் இருந்து கற்களை அகற்றும் பணியைத் தொடங்கியது.
கற்களை அகற்றும் பணி நிறைவடைந்த நிலையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கிய உடனேயே, சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தரப்பினர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிய நிலையில் சிலர் இரும்பு கம்பிகளைக் கொண்டு அதை நிரந்தரமாக மீண்டும் நிறுவ முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர், இருப்பினும் மோதல் வன்முறையானது.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த மோதலில் ஏராளமான போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கல்வீச்சில் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த, மூத்த காவல்துறை அதிகாரிகள் உட்பட ஜெய்ப்பூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்தது. நிலைமை மோசமடைவதைக் கண்ட காவல்துறை, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது.
தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் 26 காலை 7:00 மணி முதல் டிசம்பர் 27 காலை 7:00 மணி வரை சோமுவில் இணைய சேவையை காவல்துறை முடக்கியது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள போலீசார் தற்போது அப்பகுதியில் அமைதி நிலவுவதாகக் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]