கோயம்புத்தூர்:  கோவை விமான நிலையத்தில் செய்தியாலளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெகவில் இணைவது குறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம்  என்று கூறினார்.

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் நேற்றிரவு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  கூறியதாவது,

ஓபிஎஸ் அணி தவெகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவரது ஆதரவாளர்களுடன் நேற்று (டிச.23) நடத்திய ஆலோசனையின்போது தேர்தல் கூட்டணி குறித்து பெரும்பாலோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை என்றும், துரோகத்திற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே அவர் விரைவில் நல்ல முடிவுகளை மேற்கொள்வார்” என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் தவெக இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு , அதுபோன்ற கருத்துகள் இல்லை என்று கூறிய அவர், இணைய வேண்டிய இடத்தில் இணைவோம் என தெரிவித்தார். தன்னை பொறுத்த வரையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இருந்து சிலர் வருவார்களா என கேட்டால் வருவார்கள் எனக் கூறிய அவர், பாஜகவை கொள்கைரீதியாக எதிர்க்கின்றோம் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் உங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் பேசிக்கொண்டு இருப்பது உண்மை எனவும், அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தவெகவில் என்னைப் போன்றவர்களுடன் அவர்கள் தரப்பிலும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் திமுக தீவிரமாக பணியாற்றி வருவது குறித்த கேள்விக்கு, கொங்கு மண்டலத்தை யார் பிடிக்கிறார்கள் என்பதை தேர்தல் களத்தில் பார்க்கலாம் எனவும், இந்த மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிவாகை சூடும் எனவும் செங்கோட்டையன் கூறினார்.

தன்னுடைய அரசியல் பயணத்தை பொறுத்தவரை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவியுடன் பயணித்ததைப் போல விஜயுடனான பயணமு் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்தார். விஜய்க்கு வரும் 27 ,28 மலேசியாவில் நிகழ்ச்சி இருக்கிறது, அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்தெந்த மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும்  கூறினார்.

[youtube-feed feed=1]