சென்னை; எதிர்வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. நேற்று ஆலோசனை நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த காரணத்தை கொண்டும் அதிமுக இருக்கும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்கின்றனர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். மேலும் விஜய் அல்லது திமுகவை வெற்றி பெற வைத்து எடப்பாடியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்ன் எண்ணம் எனவும், அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்கின்றனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கமும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆவேசமாக பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு சந்தித்த 11 தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் அவருக்கு மக்கள் மன்றத்தில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு ஓ.பி.எஸ் பல முயற்சிகளை மேற்கொண்டும், இதுவரை அதற்கு பச்சைக்கொடி காட்டப்படாத நிலையில், அவர் தற்போது எடப்பாடி பழனிசாமியை முழுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளார் என்பதை இந்த பேச்சு உறுதிப்படுத்துகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெளியிடும் தகவல்கள் அதிமுக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் அதிமுகவில் இருந்த தன்னை கட்சியில் மதிக்காமல் ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே ஓபிஎஸின் நிலைப்பாடு என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்காவிட்டாலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரக்கூடாது என்பதுதான் ஓபிஎஸின் திட்டம் என்றும் சொல்லப்படுகிறது. பாஜக-ஓபிஎஸ்-விஜய் தனிப்பட்ட செல்வாக்கும், சமுதாய அடிப்படையிலான செல்வாக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னும் இருப்பதால், அதை எடப்பாடிக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார் எனவும் பேசப்படுகிறது.
இதன் காரணமாக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் திமுகவுடன் கூட கூட்டணி சேர ஓ.பன்னீர்செல்வம் தயங்கமாட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள், அதிமுக, பாஜக, ஓபிஎஸ், விஜய் ஆகியோரின் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை மீண்டும் அதிமுகவில் இணைய போவதில்லை என்று ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியினரின் இந்த அதிரடி நிலைப்பாடு அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]