சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான டபுள் டக்கர் (மாடி பேருந்து) மின்சார பேருந்து சேவை விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட, டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 20 புதிய மின்சார மாடிப் பேருந்துகள் வாங்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதம் இறுதியில் அல்லது 2026 ஜனவரியில் சேவை தொடங்கப்படவுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வந்த மாடி பேருந்துகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் மேம்பாலங்கள் காரணமாக 2008-இல் நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க திமுக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டது. அதற்காக புதிய பேருந்துகள் வாங்கவும் டெண்டர் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து சேவை அறிமுகமாகிறது. இந்த பேருந்து சேவையை எந்த வழித்தடங் களில் இயக்கலாம் என சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அந்த வழித்தடங்களில் தற்போது தனியார் நிறுவனம் மூலம் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிகப்பு நிறத்தில் வண்ணமயமாக காணப்படும், இந்த மின்சார டபுள் டக்கர் பஸ் அடையாரில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சோதனை ஓட்டம் மேற்கொண்டது. உத்தண்டி டோல்கேட்டை மாடி பஸ் உயரம் கடந்து சென்றுவிடுமா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சுமார் ஒரு அடி உயர இடைவெளி இருப்பதால், மாடி பஸ் எவ்வித சிரமமும் இன்றி உத்தண்டி டோல்கேட்டை கடந்து மாமல்லபுரம் நோக்கி சென்றது.
இதைத்தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது 2026 ஜனவரியில் டபுள்டக்கர் பேருந்து சேவை தொடங்க உள்ளது. இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள் அறிமுகமாவது, நகரின் பொது போக்குவரத்தில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் டபுள் டெக்கர் மாடி பேருந்துகள் 1970களில் தொடங்கி 1980கள் வரையில் சென்னையில் இத்தகைய டபுள் டெக்கர் மாடி பஸ்கள் இயக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 1997ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் முதல் தாம்பரம் வரையிலான (18ஏ தடம் எண்) வழித்தடத்தில் 2008 வரையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையை பொறுத்தவரையில் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இவை டீசலில் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளாக இருக்கும்.
இந்த பேருந்து சேவை முதற்கட்டமாக, அடையார் – மாமல்லபுரம் வழித்தடத்தில் டபுள் டெக்கர் பஸ் இயக்கப்படவுள்ளது.
முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தை அடைந்ததும், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஏறி பார்வையிட்டனர் மற்றும் செல்பிகள் எடுத்து மகிழ்ந்தனர்.
விடுமுறை மற்றும் விழா நாட்களில் இந்த டபுள் டெக்கர் பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதாரண மின்சார பஸ்களில் 60 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் நிலையில், இந்த டபுள் டெக்கர் பஸ்களில் 90 பயணிகள் பயணிக்கக்கூடிய வசதி உள்ளது.
முழு மின்சாரத்தில் செயல்படும் இந்த பஸ்கள் அதிநவீன பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையிலும், டீசல் செலவை தடுக்கும் நோக்கிலும் இந்த பஸ் சேவை மேலும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பங்களிப்புடன் இந்த பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கும் எனவும் கூறப்படுகிறது. லண்டனில் ஓடும் பழமையான டபுள் டெக்கர் பேருந்து சேவையை பிரதிபலிக்கும் வகையில் சென்னையில் ஓடப்போகும் டபுள் டெக்கர் மாடி பஸ்களின் வண்ணமும் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]