ஸ்மார்ட்போன்களில் சாட்லைட் லொக்கேஷன் டிராக்கிங் (GPS) எப்போதும் இயங்கத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய யோசனையை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்புத் துறை வழங்கியுள்ளதாகவும் இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலி மக்களை உளவு பார்க்கும் முயற்சி என்று கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதை கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது.

வழக்கு விசாரணை அல்லது சட்டபூர்வ கோரிக்கை வந்தால், தற்போது டெலிகாம் நிறுவனங்கள் செல் டவர் லொக்கேஷன் மட்டுமே அளிக்க முடிகிறது. இது சரியான இடத்தை காட்டுவதில் துல்லியமாக இல்லை என்று கூறப்படுகிறது.

 

இதையடுத்து, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI), (ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற மொபைல் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு) GPS எல்லா நேரமும் ஆன் ஆக இருந்தால் துல்லியமான லொக்கேஷன் கிடைக்கும் என்ற யோசனையைக் கூறியுள்ளது.

மேலும், பயனாளர்கள் தங்கள் லொக்கேஷனை நிறுத்திவைக்கமுடியாத வகையில் மொபைல் போன் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

COAI மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிள், கூகுள், சாம்சங் உள்ளிட்ட முக்கிய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது பயனர்களின் தனியுரிமைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் உலகில் வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத விசித்திரமான யோசனை என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனங்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இப்படி ஒரு லொக்கேஷன் கண்காணிப்பு முறை உலகில் எங்கும் நடப்பதில்லை. இது பெரிய அளவிலான ஒழுங்குமுறை மீறல்,” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 735 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் உள்ளன; அதில் 95% ஆன்ட்ராய்டு.

Apple, Google ஆகியவை, அரசு யோசனை குறித்து அனுப்பிய கடிதத்தில்:

இது சட்ட ரீதியாகவும், தனியுரிமை ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.

படை வீரர்கள், நீதிபதிகள், நிறுவன உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றோரின் பாதுகாப்பு ஆபத்தில் சிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், “டார்கெட் ஆன நபர் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்” என்பதால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற, மொபைல் நெட்வொர்க் வழங்கும் நிறுவனங்கள், போன்களில் வரும். “Carrier is trying to access your location” அதாவது, “உங்கள் நெட்வொர்க் ஆப்பரேட்டர் உங்கள் லொக்கேஷனை பெற முயற்சிக்கிறது” என்ற தகவல் பாப்அப்-பையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்கின்றன.

ஆனால் Apple, Google நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுவே பயனாளருக்கு தெளிவாக கட்டுப்பாட்டை தருகிறது; இதை நீக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளையில் இதுகுறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் IT மற்றும் உள்துறை அமைச்சகங்கள் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

GPS எப்போதும் இயங்கும் வகையில் இருந்தால், ஒருவரை ஒரு மீட்டர் துல்லியத்துடன் கண்காணிக்க முடியும் என்றும் மொபைல் போன் என்பது ஒரு நிரந்தர உளவு சாதனமாக மாறும் என்றும் நிபுணர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.