சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர், அவரது உருவபடத்தை வைத்து மரியாதை செலுத்தி வருவதுடன், பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 10.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் வளையம் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.
ஜெ.நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி, நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம் ஜெயலலிதா,
“மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த ஒப்பற்ற தலைவி.
நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை. இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை, அவர்தம் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை அதிமுக தலைமையில் 2026 பேரவைத் தேர்தலில் வாயிலாக நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அவர்களுக்கு நாம் செலுக்கும் உண்மையான புகழஞ்சலி! என கூறியுள்ளார்.

எம்ஜிஆருக்கு பிறகு எழுந்த தலைமைப் போட்டியில் பலரையும் பின்னுக்குத் தள்ளி அதிமுகவின் முகமாக உருவெடுத்த ஜெயலலிதா, தொண்டர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்ததுடன், தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியை நீண்ட காலம் வகித்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறை வால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஜெயலலிதா மரணமடைந்ததும் அவருடைய தோழி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சராக அமரவைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத் திற்கும், சசிகலாவிற்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட, எடப்பாடி பழனிசாமியை அடுத்த முதல்வராக தேர்வு செய்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன், ராசியாக மீண்டும் கட்சிக்கு ஓபிஎஸ் திரும்பினார். 2017 ஆகஸ்ட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் என்பது நீண்டகால புகைச்சலாக இருந்து வந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பு இடையே பனிப்போரும் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக கட்சி,…ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று சிதறிப்போனதாகவும், பாஜகவுக்கு அதிமுக கட்டுப்பட்டு விட்டதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்த நிலையில், பின்னாட்களில் அக்கட்சியுடன் கூட்டணியே கிடையாது என ஈபிஎஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால் அரசியல் காட்சிகள் மாறிய நிலையில், மீண்டும் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், பல்வேறு இடைத்தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சறுக்கலையே சந்தித்திருக்கிறது அதிமுக. தனிப்பெரும் கட்சியாக விளங்கிய அதிமுக, அணி அணியாக சிதறிப்போனதே இந்த தோல்விகளுக்கு காரணம் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
இறுதியாக ஒருங்கிணைப்பு முழக்கத்தை எழுப்பிய செங்கோட்டையனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட,… திடீர் திருப்பமாக விஜயுடன் இணைந்துள்ளார். ஏறும் மேடைகளில் எல்லாம் தங்களுக்கும், திமுகவுக்குமே போட்டி என உரக்க கூறி வரும் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு,… அதிமுகவை உரசிப் பார்ப்பதாகவே உள்ளது. அதனால் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தற்போது அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது.