சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மழைக்காலம் தொடங்குகிறது, மீண்டும் வட சென்னை கடுமையான மேகங்களுடன் கூடிய வரிசையில் உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
சொல்ல வார்த்தைகள் இல்லை, மற்றும் புறநகர்ப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், புழல். இது மிகவும் தீவிரமான மேகங்களாகவும், அங்கேயே குவிந்தும் உள்ளன. காலை 8.30 மணி முதல் மழை பெய்து வருகிறது. இது 150 மி.மீ.க்கு அப்பால் கூட செல்லக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. கடந்த 6 மணி நேரமாக 3 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளுர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிபோய் உள்ளது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், “சொல்ல வார்த்தைகளே இல்லை. மழை மேகங்கள் வட சென்னை மற்றும் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், புழல் போன்ற புறநகர்ப் பகுதிகளில் அப்படியே தேங்கி நிற்கின்றன. மேகங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன், அவை அங்கேயே குவிந்து வருகின்றன.
ஏற்கெனவே பல இடங்களில் நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது, மேலும் காலை 8.30 மணிக்குப் பிறகு இன்னும் 150 மி.மீ-க்கு மேல் கூட மழைப்பொழிவு செல்ல வாய்ப்புள்ளது. அதேசமயம், தென் சென்னையில் ஒரு துளி மழை கூட இல்லை:” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், அடுத்த மழைக்காலம் மீண்டும் வட சென்னையிலிருந்து பொன்னேரி பகுதிக்குள் தொடங்குகிறது. உருவாகும் ஒவ்வொரு மேகமும் வட சென்னை மண்டலத்திற்குள் நகர்கிறது. நாம் பார்க்க முடியும் என, தென் சென்னையில் மேகங்கள் இல்லை.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.2) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ., பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, இன்று மாலை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாருர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தேனி, தென்காசி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 4-ம் தேதி) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.