டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி,  பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு “சேவா தீர்த்’ (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது சேவைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இல்லம் 2016 ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என மறுபெயரிடப்பட்டது. தற்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

டெல்லியில் உள்ள  பிரதமர் அலுவலகம் உள்பட  “எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ்’ எனப்படும் அரசுக் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பிரதமர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில்  அதற்கு புதிய பெயர் வைக்க முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி மத்திய அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்தியா ஹவுஸ் ஆகியவை இடம்பெற உள்ளன. அதனால் இந்த  கட்டடத்தின் பெயர் “சேவா தீர்த்’  வைக்கப்பட உள்ளது.

 இது தொடர்பாக கூறிய மத்தியஅரசின் அதிகாரிகள்,  “மக்களுக்கு சேவை செய்வதை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பணியிடத்திற்கு சேவைத்தலம் என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாவும்,  ஆட்சி நிர்வாகத்தின் சிந்தனையானது “அதிகாரம்’ என்பதில் இருந்து “சேவை’ என்பதாக மாறி வருகிறது. பிரதமர் அலுவலகத்துக்கான பெயர் மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான மாற்றமாக மட்டுமின்றி கலாசார மற்றும் தார்மிக ரீதியிலானதாகவும் அமைகிறது.

 இந்தியாவின் பொது அமைப்புகள் மாற்றத்தைக் கண்டுவருகின்றன. ஆளுநர் மாளிகைகளின் பெயர்கள் “ராஜ் பவன்’ என்பதில் இருந்து “லோக் பவன்’ (மக்கள் மாளிகை) என்று மாற்றப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி நிர்வாகப் பணியிடங்கள் கடமையையும், வெளிப்படைத் தன்மையையும் பிரதிபலிப்பதாக மாற்றப்பட்டு வருகின்றன. இனி ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு கட்டடமும், ஒவ்வோர் அடையாளமும் மக்களுக்கு சேவை செய்வதையே குறிப்பதாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.

ஏற்கனவே டெல்லி உள்ள “ராஜ்பத்’ பகுதியின் பெயர் “கர்த்தவ்ய பத்’ (கடமைப் பாதை) என்று மாற்றப்பட்டது. அதுபோல, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள இடத்தின் பெயர் “லோக் கல்யாண் மார்க்’ என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அது மக்களின் நலவாழ்வைக் குறிப்பதாக அமைந்திருந்தது. அதேபோன்று மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் பெயர் “கர்த்தவ்ய பவன்’ என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.