சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  கூறியதாவது, டிட்வா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய நிவாரணம் வழங்கப்படும். நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மயிலாடுதுறை மற்றும் விழுப்புரத்தில் இருவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து இருவர் இறந்துள்ளனர்.  582 கால்நடைகள் இறந்துள்ளன. 1,601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வு மைய கணிப்புக்குள் இந்த மழை வரவில்லை. சென்னையில் தோராயமாக 15 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் சாலைகளில் விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.