சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்குத் தகுதியற்றது என கடுமையாக விமர்சித்தார்.
அதுபோல எஸ்ஐஆர் தொடர்பாக தவெக, விசிக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது டிசம்பர் 4ந்தேதி விசாரணை நடத்தப்படும் என தலைமைநீதிபதி சூர்யகாந்த் அறிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் போலி வாக்குகள் களையெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.
இந்த விவகாரத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ரிட் மனு முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆா்) பெருமளவில் உண்மையான வாக்காளா்கள் நீக்கப்படுவாா்கள் என்ற தமிழகம், மேற்கு வங்க அரசுகளின் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தின் செயலா் பவன் திவான் தாக்கல் செய்துள்ள 81- பக்க பதில் மனுவில், ‘வாக்காளா்களின் குடியுரிமையை உறுதி செய்வதற்கு தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெற வாக்காளா் பட்டியலின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான எஸ்ஐஆா் வழிமுறைகளை அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 326-வின்படி தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நாடு முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆா் பணிக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்று, எஸ்.ஐ.ஆர் விவகாத்தில் ஆர்.எஸ்.பாரதியின் ரிட் மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், எஸ்ஐஆா்-க்கு எதிராக திமுக, மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடுத்த வழக்கில் தோ்தல் ஆணையம் தனித் தனியாக பதிலளிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில், தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பிற மனுக்களுடன் சோ்த்து டிச. 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக தவெக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கி அமா்வு முன் விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்களை தமிழகத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பிற மனுக்களோடு இணைத்து டிசம்பா் 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
தவெக சாா்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ‘வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது சில இலக்குகளை அடைய அதிக அழுத்தம் உள்ளது. அவா்கள் இலக்கை அடையவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. எஸ்ஐஆா் பணியால் ஏற்படும் அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் 21 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்றாா்.