சென்னை:  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல்  7 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி  நகர்ந்து வருவதாகவும், நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல்   காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.  மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை மிரட்டி வரும்  டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது . இது நாளை (ஞாயிற்று கிழமை) கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகியுள்ளதை அடுத்து இலங்கையில் கடும் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அங்கு மழை நீடித்து வருகிறது.

தரைப்பகுதியில் இருந்து டிட்வா புயல் கடல் பகுதிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை அருகே வங்கக்கடலை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று – 29.11.2025:

கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையுடன், சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (30.11.2025)

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் (வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையுடன், சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (01.12.2025) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்க்பபட்டுள்ளது.