சென்னை: பாமகவை  கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில், பா.ம.க.  கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் அன்புமணி தரப்புக்கே உள்ளது என்று தேர்தல் ஆணையம் (ECI)  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இது  ராமதாஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்புமணி  பொய்சொல்லியும், பொய்யான ஆதாரத்தை கொடுத்தும், கட்சியை திருடி உள்ளார் என தெரிவித்துள்ள  ஜிகே மணி, டெல்லியில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

பாமகவில் எழுந்துள்ள அதிகார மோதல், வன்னிய மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பா.ம.கவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. கட்சி நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக இருதரப்பும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன.

இதன் உச்சமாக, சமீபத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், தானே கட்சி தலைவர் என கூறி அன்புமணி தனது ஆதரவாளர்களைக்கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இதனால்,  பலர் மாற்று கட்சிகளை நாடி செல்வதால், பாமகவின் நிலை நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது.  ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில்,  பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்றும், வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அவரே தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அன்புமணி தரப்புக்கு உற்சாகத்தையும், ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க.வின் தலைமை யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணையம் எழுதியுள்ள  கடிதத்தில்,  பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியைத் தான் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர் என்பதற்கான தரவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் அன்புமணி தரப்புக்கே உள்ளது. தலைவர் பதவி குறித்து ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அதனை தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை  பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கடுமையாக விமர்சித்துள்ளார். , இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்தபோது, 2022-ஆம் ஆண்டு அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்டார். விதிகளின்படி இது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். ஆனால், தேர்தல் ஆணையம் 2026 வரை அவர் தலைவராகத் தொடரலாம் எனக் கூறுகிறது.

2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 2023-ல் பொதுக்குழுக் கூட்டம் நடக்கவே இல்லை. நடக்காத கூட்டத்தை நடந்ததாகக் காட்டி, அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது கட்சியையே திருடியதற்கு ஒப்பான செயலுக்குத் தேர்தல் ஆணையம் துணை போயுள்ளது. இது மிகப்பெரிய மோசடி மற்றும் ஜனநாயகப் படுகொலை என்று கூறி உள்ளார்.

டெல்லியில் போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்து, டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.