சென்னை: நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன்… சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், புலிக்கு வாலாக இருப்பதே பெருமை.. ஆனால் எலிக்கு தலைவனாக இருந்து என்ன பிரயோஜனம்… இங்கே அ.தி.மு.க. தான் புலி என்றார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு தவெக பல பொறுப்புகளை வழங்கி உள்ளது. அதன்படி, தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அதேபோல் விஜய்யுடன் நேரடியாக கலந்தாலோசித்து செயல்படும் வகையில் செங்கோட்டையனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டையன் மகிழ்ச்சியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் சிலரையும் தவெக பக்கம் இழுக்கும் பணிகளில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிமுக கோட்டையான, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அதனால் அவரை விமர்சிக்க முடியாது. அவர் குறித்து ஒரு கருத்துதான் சொல்ல முடியும். எங்கிருந்தாலும் வாழ்க..
அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அது உண்மை இல்லை. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அ.தி.மு.க. கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.
புலிக்கு வாலாக இருப்பதே பெருமை.. ஆனால் எலிக்கு தலைவாக இருக்க கூடாது.. இங்கே அ.தி.மு.க. தான் புலி.. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது.
நான் ஒருபோதுழம் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாள் நடக்காது. அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை.. அ.தி.மு.க. தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
…