சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’  என திமு அமைச்சர் ரகுபதி  விமர்சித்துள்ளார்.  த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு  கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை நேற்று(புதன்கிழமை) ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சென்னை பனையூரில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னை திமுக உள்பட  எந்தவொரு கட்சியும் அழைக்கவில்லை என்று தெரிவித்தார்.

“திமுக வேறல்ல, அதிமுக வேறல்ல என அனைவரும் அறிந்த ஒன்றுதான். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்கு, தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறார். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். தமிழகத்தை இவர்கள் மட்டும் தான் ஆள வேண்டுமா?. தூய்மையான ஆட்சி நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மனதில் நிறைந்து இருக்கிறது.

எல்லா நாடுகளிலும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. தமிழக மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026 மக்களால் வரவேற்கப்படுகிற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற மக்களால் உருவாக்கப்படுகிற புனித ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெறுவார். 2026 மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றிக்கனையை எட்டுவார். இன்று திமுக வேறு அல்ல அதிமுக வேறு அல்ல. தெளிவான முடிவை மேற்கொண்டு தான் சட்டமன்ற உறுப்பினரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ரகுபதி,  தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது என்றவர், , செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்  என்றார். த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு பாஜக தலைமை கொடுத்துள்ள அசைன்மென்ட் என்று விமர்சித்த அமைச்சர், அமித் ஷா அழைத்தால் ஓடுவார் செங்கோட்டையன் என்றவர்,  இன்றைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருப்பவர்  செங்கோட்டையன் என்றும் கூறினார்.

செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பியவர்,  அவரை திமுக அழைக்கவில்லை என்றும்,  செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்த பிறகு நட்பு ரீதியில் திமுகவுக்கு  வாருங்கள் என்று சேகர்பாபு அழைத்து இருக்கலாம் என்றும், கூறினார்.