சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில்,  ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் டிட்வா புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ‘டிட்வா’ புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாக  டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்த்நது, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதடன், அலர்ட்டாக இருக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள  ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தயார் நிலையில்  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளத.  இதற்காக, சீனியர் கமாண்டண்ட் அகிலேஷ் குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவசர நடவடிக்கைக்காக 30 வீரர்களை கொண்ட 10 சிறப்பு மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

அதுமட்டுமின்றி,  படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. இந்த மையம் மாநில அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டு அறைகளுடன் நேரடி தொடர்பிலிருந்து அவசர தகவல் பரிமாற்றம், நடவடிக்கை ஒருங்கிணைப்பு மற்றும் நிலைமையைக் கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளும் . மேலும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், மரம் வெட்டும் மின்னணு கருவிகள், ரப்பர் படகுகள், மருத்துவ முதலுதவி உபகரணங்கள், மோப்ப நாய்கள், ஆழ்நிலை நீர்மூழ்கி வீரர்கள், மீட்பு கருவிகள் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் தேவையான நவீன உபகரணங்களும் இங்கு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாகும் பகுதிகளை என்டிஆர்எஃப் குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. குறிப்பாக ஆறுகள், குறைந்த நிலப்பகுதிகள், மரம் வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிளில் விரைவாக உதவி வழங்க பயிற்சியும், தள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. கனமழை மற்றும் புயல் சூழ்நிலைகளில் மக்கள் அமைதியாக இருக்கவும் அரசு மற்றும் NDRF வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாநில நிர்வாகத்துடன் இணைந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.