சென்னை: இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன், அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர் என இன்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து தவெக தலைவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் விடியோ  வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உடனான கருத்து வேறுபாடு காரணமாக,  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன்,  நேற்று (நவம்பர் 26) தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திந்கு சென்று  அக்கட்சியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, இன்று காலை, விஜய் முன்னிலையில், அக்கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன்  இணைந்தார். செங்கோட்டையனுக்கு தவெக துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை அக்கட்சித் தலைவர் விஜய் வழங்கினார்.

மேலும்,,  செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் பேசியிருப்பதாவது,   ”20 வயது இளைஞராக இருக்கும்போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தலைமையை ஏற்று, அவரது மன்றத்தில் இணைந்தவர், அந்த வயதிலேயே எம்எல்ஏ பொறுப்பை ஏற்றவர், அக்கட்சியின் இருபெரும் தலைவர்களுக்கு பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.

இப்படியாக 50 ஆண்டுகாலமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவருடைய அரசியல் அனுபவமும், களப் பணியும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம்முடன் கைக்கோர்க்கும் அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.

நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மாவட்டங்களின் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி ‘கடுப்பு’

விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்…